விராட் கோலியின் இந்த 3 சாதனைகளை அசால்டாக முறியடிக்க போகும் ஜெய்ஸ்வால்!

India vs England Test Series: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 3-1 என்று வெற்றி பெற்றுள்ளது.  முதல் போட்டியில் தோல்வி அடைந்து இருந்தாலும், அடுத்த 3 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. இதற்கு முக்கிய காரணங்களில் ஒருவர் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தான்.  இவரது அபாரமான ஆட்டம் இந்தியாவிற்கு வெற்றியை தேடி தந்தது. இந்த தொடரில் நான்கு போட்டிகளில் விளையாடி 655 ரன்களை குவித்துள்ளார்.  ஹைதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் 80 ரன்கள் அடித்த ஜெய்ஸ்வால், அதன் பிறகு தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி உள்ளார். அவர் விளையாடிய 8 இன்னிங்ஸில் இரண்டு இரட்டை சதங்கள் உட்பட 15, 209, 17, 10, 214, 73 மற்றும் 37 ரன்களை அடித்துள்ளார்.

ஜெய்ஸ்வாலின் இந்த அசத்தலான பேட்டிங் பல சாதனைகளை முடியடித்துள்ளது. ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக 2 இரண்டு இரட்டை சதங்கள் அடித்த வீரர் போன்ற சாதனைகளை பெற்றுள்ளார்.  இந்தத் தொடர் முழுவதும் இந்திய அணி சில முக்கிய வீரர்கள் இன்றி சிரமப்பட்டது.  விராட் கோலி தனிப்பட்ட காரணங்களால் தொடர் முழுவதும் விலகினார். மேலும் முதல் டெஸ்டில் விளையாடிய கேஎல் ராகுல் காயம் காரணமாக அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடவில்லை. இப்படி முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில், ஜெய்ஸ்வால் அடித்த ரன்கள் ரன்கள் அணிக்கு பெரிதும் உதவியது.  தர்மசாலாவில் நடைபெற உள்ள 5வது மற்றும் கடைசி டெஸ்டில் ஜெய்ஸ்வால் இன்னும் ரன்களை குவித்தால் விராட் கோலியின் சில மகத்தான சாதனைகளை முறியடிக்க முடியும்.

டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான அதிக ரன்கள்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார்.  இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்தியாவுக்காக அதிக ரன் எடுத்த வீரர் என்ற சாதனையை படைக்க ஜெய்ஸ்வாலுக்கு இன்னும் ஒரு ரன் மட்டுமே தேவைபடுகிறது.  இதனால் எளிதாக இந்த சாதனையை படைக்க உள்ளார்.

ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்

ஒரு அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் பெற முடியும். இதற்கு  முன்பு, விராட் கோலி 2014-15 தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 692 ரன்கள் அடித்துள்ளார்.  இன்னும் 38 ரன்கள் எடுத்தால், இந்தியாவுக்காக டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடிப்பார் ஜெய்ஸ்வால். முதல் இரண்டு இடங்களை சுனில் கவாஸ்கர் பிடித்துள்ளார். ஜெய்ஸ்வால் இன்னும் 45 ரன்கள் அடித்தால், இந்தியா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 700+ ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் இணைவார். இதற்கு முன்பு, இங்கிலாந்தின் கிரஹாம் கூச் (1990ல் 752), ஜோ ரூட் (2021-22ல் 737) ஆகியோர் மட்டுமே இந்தியா மற்றும் இங்கிலாந்து தொடரில் 700+ ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர். 

மேலும், சுனில் கவாஸ்கர் அடித்த 774 ரன்கள் என்ற சாதனையை வீழ்த்தி இருதரப்பு டெஸ்ட் தொடரில் அதிக ரன் எடுத்த இந்திய வீரராக மாற ஜெய்ஸ்வாலுக்கு இன்னும் 120 ரன்கள் தேவைப்படுகிறது. அதே போல இங்கிலாந்துக்கு எதிராக விராட் கோலி மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தலா இரண்டு சதங்கள் அடித்துள்ளனர். தரம்சாலாவில் நடைபெற உள்ள ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் சதம் அடிக்க முடிந்தால், விராட் கோலியை முந்தி இங்கிலாந்துக்கு எதிராக அதிக சதம் அடித்தவர் என்ற பெருமையை பெற முடியும்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.