ஆஸ்கார் விருதுகள்: இந்தியாவில் எப்போது, எங்கே காணலாம்? இதோ விவரம்

லாஸ் ஏஞ்சல்ஸ்,

உலகம் முழுவதும் திரை துறையை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய மற்றும் கவுரவம் அளிக்கும் விருதுகளாக ஆஸ்கார் விருதுகள் அறியப்படுகின்றன. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஹாலிவுட்டில் உள்ள டால்பி திரையரங்கில் 96-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

வருகிற 10-ந்தேதி நடைபெற திட்டமிடப்பட்டு உள்ள இந்த நிகழ்ச்சியை 4-வது முறையாக காமெடி நடிகரான ஜிம்மி கிம்மெல் வழங்க இருக்கிறார். அமெரிக்காவில் ஞாயிற்று கிழமை இரவில் சிவப்பு கம்பள வரவேற்பு கொண்டாட்டங்கள் மற்றும் விருது நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறும். எனினும், இந்தியாவில் அடுத்த நாள் (திங்கட்கிழமை) அதிகாலையிலேயே தெரியும். இதன்படி, 11-ந்தேதி அதிகாலை முதல் இதனை நேரலையாக காண முடியும். இந்த நிகழ்ச்சியை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் அதிகாலை 4 மணி முதல் லைவாக பார்க்கலாம்.

இந்த லைவ் ஒளிபரப்பு நிகழ்ச்சியுடன், அதன் அமைப்பாளர்கள் அவர்களுடைய எக்ஸ் சமூக வலைதளத்தின் வழியே, ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுபவர்களின் பெயர்கள் உள்ளிட்ட விவரங்களை அடுத்தடுத்து வெளியிடுவார்கள்.

இந்த முறை இந்தியாவில் இருந்து எந்த படைப்புகளும் தேர்வாகவில்லை. கடந்த 2023-ம் ஆண்டில், கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளிவந்த ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகளை பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம் 13 பிரிவுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. அவற்றில் சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குநர் பிரிவுகளும் அடங்கும். இதுதவிர, பார்பி, புவர் திங்ஸ், கில்லர்ஸ் ஆப் தி பிளவர் மூன் ஆகிய படங்களும் பரிந்துரை பட வரிசையில் இடம் பெற்றுள்ளன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.