Indian worker killed in missile attack in Israel; Two injured | இஸ்ரேலில் நடந்த ஏவுகணை தாக்குதலில் இந்திய தொழிலாளி பலி; இருவர் காயம்

ஜெருசலேம், இஸ்ரேலில் பயங்கரவாதிகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில், தோட்டத் தொழிலில் ஈடுபட்டிருந்த இந்திய தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்; இருவர் காயமடைந்தனர்.

பயங்கரவாத அமைப்பு

மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே, கடந்தாண்டு அக்டோபரில் இருந்து போர் நடந்து வருகிறது.

ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து, அண்டை நாடான லெபனானில் இருந்து இயங்கி வரும் ஹெஸ்பொலா பயங்கரவாத அமைப்பு, அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இதுவரை நடந்துள்ள தாக்குதல்களில், இஸ்ரேல் தரப்பில், 10 ராணுவ வீரர்கள், ஏழு பொதுமக்கள் இறந்துள்ளனர்.

இஸ்ரேல் நடத்திய பதில் தாக்குதலில், 229 ஹெஸ்பொலா பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், லெபனானில் இருந்து ஹெஸ்பொலா பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு ஏவுகணை, இஸ்ரேலின் வடக்கு எல்லையில் உள்ள மார்க்கலியாட் பகுதியில் விழுந்தது.

தோட்டப்பணி

அந்த பகுதியில் அதிகளவில் தோட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த ஏவுகணை விழுந்ததில், அங்கு தோட்டப் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர். இந்த மூன்று பேரும், கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலில் பட்னிபின் மேக்ஸ்வெல், 30, என்பவர் உயிரிழந்தார். புஷ் ஜோசப் ஜார்ஜ், 31, மற்றும் பால் மெல்வின், 28, காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு புதுடில்லியில் உள்ள இஸ்ரேல் துாதரகம் கண்டனம் தெரிவித்துஉள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படுவதாக, இஸ்ரேல் துாதரகம் கூறியுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.