டேக்-ஆப் ஆன விமானத்தில் இருந்து கழன்று விழுந்த டயர்.. வைரலாகும் வீடியோ

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் இருந்து ஜப்பானுக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று புறப்பட்டுச் சென்றது. அதில் 235 பயணிகள், 14 ஊழியர்கள் பயணித்தனர். விமானம் டேக்-ஆப் ஆனபோது விமானத்தின் ஒரு டயர் கழன்று வேகமாக தரையில் விழுந்தது. விமான நிலைய ஊழியர்களின் பார்க்கிங் பகுதியில் டயர் விழுந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அந்த டயர் ஒரு காரின் பின்பக்க கண்ணாடியில் விழுந்து, பின்னர் அருகில் உள்ள வேலியில் மோதி நின்றது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

அதேசமயம், 6 டயர்களில் ஒரு டயர் இல்லாமல் தொடர்ந்து பறந்த விமானம், பாதுகாப்பு கருதி லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதுவும் ஓடுபாதையின் பாதியிலேயே விமானம் நிறுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்து இழுத்துச் செல்லப்பட்டது. பயணிகளுக்கு வேறு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.

விமானத்தின் டயர் கழன்று விழுந்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த விமானம் 2002-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டதாகவும், டயர்கள் சேதமடைந்தாலோ, சில டயர்கள் இல்லாத நிலையிலோ பாதுகாப்பாக தரையிறங்கும் வகையில் விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.