ஹர்மன் பீரித் கவுர் அபாரம்: குஜராத்தை வீழ்த்தி மும்பை அணி அசத்தல் வெற்றி

புதுடெல்லி,

2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 5 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்குள் நுழையும்.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் பெத் மூனி பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கம் முதல் குஜராத் அணி வீராங்கனைகள் அதிரடி காட்டினர். பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டனர். இதனால் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது.. அந்த அணியில் அதிகபட்சமாக தயாளன் ஹேமலதா 74 ரன்களும், பெத் மூனி 66 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியின் சார்பில் முதலாவதாக களமிறங்கிய மேத்யூஸ் 18 ரன்களில் வெளியேற, மறுமுனையில் சிறப்பாக விளையாடிய யாஸ்டிகா பாட்டியா 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சீவர்-பூருண்ட் 2 ரன்களில் கேட்ச் ஆனார்.

அடுத்து களமிறங்கிய அதிரடி காட்டிய கேப்டன் ஹர்மன் பீரித் கவுர் 48 பந்துகளில் 5 சிக்சர்கள், 10 பவுண்டரிகளுடன் 95 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவருடன் களத்தில் இருந்த அமெலியா கவுர் 12 ரன்கள் எடுத்தார்.

முடிவில் மும்பை அணி 19.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்தது. குஜராத் அணியின் சார்பில் கார்னர், கென்வர் மற்றும் ஷகில் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.

இதன்படி 5-வது வெற்றியை பதிவு செய்துள்ள மும்பை அணி, 10 புள்ளிகளுடன், புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.