Chief Minister Sidhu accuses BJP of trying to change the Constitution | அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற முயற்சி பா.ஜ., மீது முதல்வர் சித்து குற்றச்சாட்டு

உடுப்பி : அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற பா.ஜ., முயற்சி செய்வதாக, முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.

முதல்வர் சித்தராமையா உடுப்பியில் நேற்று அளித்த பேட்டி:

பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., சுகுமார் ஷெட்டி, முன்னாள் எம்.பி., ஜெயபிரகாஷ் ஹெக்டே காங்கிரசில் இணைந்து இருப்பதால், கடலோர மாவட்டங்களில் காங்கிரஸ் பலம் பெறும். உடுப்பி – சிக்கமகளூரு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் யார் என்று, கட்சி மேலிடம் முடிவு செய்யும்.

மைசூரு பா.ஜ., – எம்.பி., பிரதாப் சிம்ஹா சீட் கிடைக்காது என்று தெரிந்ததும், கவலையில் உள்ளார். அரசியலில் சித்தராமையாவுக்கு எதிராக நிற்கும் ஒரே நபர் நான் தான் என்று, பிரதாப் சிம்ஹா கூறி உள்ளார்.

என்னை எதிர்த்து அவர் எந்த தேர்தலில் போட்டியிட்டார். லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை, மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. இத்தனை நாட்கள் என்ன செய்தனர்? அவர்களுக்கு தோல்வி பயம் வந்து உள்ளது.

காங்கிரஸ் அரசின் ஐந்து வாக்குறுதித் திட்டங்கள் பற்றி, மாநில மக்களிடம் பா.ஜ., தவறான தகவல் கொடுக்கிறது. வாக்குறுதித் திட்டம் பற்றி பயனாளிகளுக்கு தெரிவிக்கவும், பா.ஜ.,வின் குற்றச்சாட்டு பொய் என்று நிரூபிக்கவும், வாக்குறுதித் திட்ட மாநாடுகளை நடத்துகிறோம். வாக்குறுதிகளை செயல்படுத்த, மாவட்ட அளவில் குழுவை உருவாக்கி இருக்கிறோம்.

‘கர்நாடகா அரசு கருவூலம் காலியாக இருக்கிறது’ என, பிரதமர் மோடி கூறினார். அன்புள்ள பிரதமரே… கர்நாடகா நிதி ரீதியாக திவாலாகவில்லை.

முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, எதிர்க்கட்சித் தலைவர் அசோக் உள்ளிட்டோர் விவாதத்திற்கு வர வேண்டும். பா.ஜ., ஏழைகளுக்கான கட்சி இல்லை. ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று மட்டும், பா.ஜ.,வினர் சொல்கின்றனர். இதன்மூலம் சீதாதேவியிடம் இருந்து, ராமரை பிரித்து விட்டனர்.

கொப்பால் அஞ்சனாத்ரி மலையில் உள்ள, ஹனுமன் கோவில் மேம்பாட்டிற்கு 100 கோடி ரூபாய் கொடுத்துள்ளோம். இது ஹிந்து விரோதமா? ஹிந்துத்வாவை பா.ஜ., எங்களுக்கு கற்றுக் கொடுப்பது சரியா?

‘அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்வோம்’ என, பா.ஜ., – எம்.பி., அனந்த்குமார் ஹெக்டே அடிக்கடி கூறுகிறார். அரசியலமைப்பு இருந்தால் தான் நாடு பிழைக்கும். அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற, பா.ஜ., முயற்சி செய்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.