மம்தா பானர்ஜி காயம்: விசாரணைக்கு மேற்கு வங்க பாஜக தலைவர் வலியுறுத்தல்

கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜிக்கு ஏற்பட்ட காயம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அம்மாநில பாஜக தலைவர் சுகந்த மஜும்தார் வலியுத்தியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுகந்த மஜும்தார், “மம்தா பானர்ஜி எங்கள் முதல்வர். எனவே, அவர் விரைவாக குணமடைய வேண்டும் என்பது எனது முதல் கருத்து. இரண்டாவது, நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், அவரை யாரோ பின்னால் இருந்து தள்ளிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், இன்றைய அறிக்கையில், பின்னால் இருந்து யாரோ தள்ளிவிட்டது போல் மம்தா பானர்ஜி உணர்ந்தார் என மாற்றப்பட்டுள்ளது.

இது விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒரு விஷயம். விசாரணை நடத்த வேண்டியவர்கள் இதனை கருத்தில் கொள்ள வேண்டும். முதல்வரின் பாதுகாப்பில் ஏதேனும் விதிமீறல்கள் நடந்திருந்தால் உள்துறை அமைச்சகம் விழிப்புடன் இருக்க வேண்டும். தேவைப்பட்டால் மம்தா பானர்ஜியை முதல்வர் மாளிகைக்கு மாற்ற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கொல்கத்தாவில் உள்ள காளிகாட் வீட்டில் மம்தா பானர்ஜி நேற்று (வியாழக்கிழமை) கீழே விழுந்ததில் அவரது நெற்றியிலும், மூக்கிலும் காயம் ஏற்பட்டது. ரத்தம் வழிந்த முகத்தோடு அவர் கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படத்தை திரிணமூல் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டது. சிகிச்சை முடிந்ததை அடுத்து மம்தா பானர்ஜி இன்று வீடு திரும்பினார்.

“ரத்தம் வழிந்த நிலையில் காயங்களுடன் முதல்வர் மம்தா பானர்ஜி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவருக்கு நெற்றி மற்றும் மூக்கு பகுதியில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டு இருந்தது. நெற்றியில் மூன்று தையல் மற்றும் மூக்கில் ஒரு தையல் போடப்பட்டுள்ளது. அவருக்கு நரம்பியல், இருதயவியல் மற்றும் பொது மருத்துவ துறையின் தலைமை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஈசிஜி மற்றும் சிடி ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அவர் தொடர்ந்து மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்ள மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டார். ஆனால், அவர் வீட்டிற்கு செல்வதாக தெரிவித்தார். அவர் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார். மருத்துவ வல்லுநர்கள் வழங்கும் ஆலோசனையின்படி அவருக்கு மேல் சிகிச்சை வழங்கப்படும்” என எஸ்எஸ்கேஎம் மருத்துவமனை இயக்குனர் மணிமோய் பந்தோபாத்யாய் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.