மித் vs ரியாலிட்டி: தேர்தல் ஆணையத்தின் புதிய அதிரடி திட்டம் என்ன?

புதுடெல்லி: சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுக்க மித் vs ரியாலிட்டி (Myth vs Reality) திட்டத்தை அறிமுகப்படுத்தப்போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் 2024 குறித்த அறிவிப்பை வெளியிட்ட தலைமைத் தேர்தல் ஆணையர், அரசியல் கட்சிகள் பொய்ச் செய்திகளை பரப்பக் கூடாது என எச்சரித்தார். மேலும், சமூக ஊடகங்களில் பொய்ச் செய்திகள் பரப்பப்படுவதைத் தடுக்க ‘மித் vs ரியாலிட்டி’ திட்டம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

மித் vs ரியாலிட்டி திட்டம்: சமூக ஊடக தளங்களில் வெளியிடப்படும் போலி செய்திகள் மற்றும் கட்டுக்கதைகளை எவ்வாறு கண்டறிவது என்பது பற்றிய விவரங்களை மித் vs ரியாலிட்டி திட்டம் வழங்க உள்ளது. சமூக வலைதளங்களில் பொறுப்புடன் செயல்படுவதை உறுதி செய்ய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதுடன், போலி செய்திகளை உருவாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

பொய்ச் செய்திகள் பரப்பப்படுவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கைகள்: சமூக ஊடகங்களை பொறுப்புடன் பயன்படுத்துமாறு அரசியல் கட்சிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. பொய்ச் செய்திகளை உருவாக்குபவர்கள் மீது தற்போதுள்ள சட்டத்துக்கு உட்பட்டு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். தகவல் தொழில்நுட்ப சட்டம் 79(3)(B)-ன்படி, சட்டவிரோத பதிவுகளை நீக்குவதற்கு மாநில தேர்தல் அலுவலர்களுக்கு அதிகாரம்.


பொய்ச் செய்திகளை கண்டறிவதில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மித் vs ரியாலிட்டி திட்டத்தை செயல்படுத்துவது ஆகிய நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.

அதோடு, மக்களவைத் தேர்தல் 2024ஐ முன்னிட்டு பொதுவான அறிவுறுத்தல்களை தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு வழங்கி உள்ளது. அதன்படி, தேர்தல் பிரச்சாரங்கள் மக்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்க வேண்டும்; மாறாக மக்களை பிரிப்பதாக இருக்கக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரச்சினைகளின் அடிப்படையில் பிரச்சாரம் இருக்க வேண்டும்; வெறுப்பு பேச்சுக்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சாதி அல்லது மதத்தின் அடிப்படையில் வாக்கு கோர கூடாது. தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கக் கூடாது. நாகரீகமான முறையில் வாக்கு சேகரிக்க வேண்டும். உறுதிப்படுத்தப்படாத அல்லது தவறான தகவல்களை / விளம்பரங்களை தவிர்க்க வேண்டும். விளம்பரங்களை செய்தியைப் போல வழங்கக்கூடாது. எதிர்தரப்பை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களை பயன்படுத்தக்கூடாது. நட்சத்திர பேச்சாளர்கள் கண்ணியத்தோடு பேச வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. தேர்தல் அட்டவணை > ஏப்.19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக 2024 மக்களவைத் தேர்தல் – தமிழகத்தில் ஏப்.19-ல் வாக்குப் பதிவு

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.