Severe water shortage in Bengaluru, IT workers fleeing to their hometowns | பெங்களூரில் தீவிரமாகும் தண்ணீர் தட்டுப்பாடு : சொந்த ஊருக்கு ஓட்டம் பிடிக்கும் ஐ.டி., ஊழியர்கள்

பெங்களூரு :கர்நாடகாவின் பெங்களூரில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவு வதால், அங்கு பணிபுரியும் ஐ.டி., ஊழியர்கள் சொந்த ஊர் சென்று வீட்டில் இருந்து வேலை செய்ய முடிவு செய்துள்ளனர்.

அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு ஷாப்பிங் மால்களுக்கு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

தொடரும் பாதிப்பு

கர்நாடகாவின் பெங்களூரில் கடந்த சில நாட்களாக கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. நிலத்தடி நீர் குறைவு, பருவமழை பற்றாக்குறை போன்ற காரணங்களால் பெங்களூரு நகரம் மட்டுமின்றி புறநகர் பகுதிகளில் பாதிப்பு தொடர்கிறது.

ஏற்கனவே சில பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தண்ணீர் சேமிப்பு தொட்டிகளுடன் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள், வீதிகளில் தண்ணீர் எடுத்துவரும் டேங்கர் லாரிகளுக்கு காத்திருக்கும் அவலம் நீடிக்கிறது.

அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் இயற்கை உபா தைகளை கழிப்பதற்கு, ஷாப்பிங் மால்களை நாடிச் செல்கின்றனர்.

தண்ணீரை சிக்கனமாக செலவு செய்ய முடிவு செய்துள்ள உணவக உரிமையாளர்கள், பாத்திரங்களுக்கு பதிலாக ஒருமுறை உபயோகிக்கும் பேப்பர் தட்டுகள், இலைகள், டம்ளர்களை பயன்படுத்தத் துவங்கி உள்ளனர்.

அவல நிலை

இங்குள்ள ஐ.டி., நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், சொந்த ஊர் சென்று வீடுகளில் இருந்து வேலை செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து சிங்கசந்திரா பகுதியில் வசிக்கும் திருச்சியைச் சேர்ந்த லட்சுமி கூறுகையில், ”தங்கும் இடத்திலும், வேலை செய்யும் இடத்திலும் தண்ணீர் தட்டுப்பாடு.

”இதனால் சொந்த ஊர் சென்று அங்கேயே தங்கி வீட்டில் இருந்து வேலை செய்ய முடிவு செய்துள்ளோம். இயல்பு நிலை திரும்பிய பின் பெங்களூரு திரும்ப திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.

காவிரி ஆறு மற்றும் நிலத்தடி வாயிலாக தண்ணீர் பெற்று வரும் பெங்களூருவாசிகளின் அவல நிலையை சமாளிக்க அரசு தேவையான முயற்சிகளை எடுத்து வருவதாக ஆளும் காங்கிரஸ் கூறியுள்ளது.

ஒருநாள் குளியல்

பெங்களூரு கே.ஆர். புரத்தில் வசிக்கும் சுஜாதா கூறியதாவது:வெயில் காலம் துவங்கிவிட்டது. தினசரி குளித்தால் தான் சமாளிக்க முடியும். இருப்பினும் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால், ஒருநாள் விட்டு ஒருநாள் குளிக்க முடிவு செய்துள்ளோம். உணவு சமைக்க, துணி துவைக்க, பாத்திரங்கள் கழுவ தண்ணீர் இல்லை. ஒருமுறை பயன்படுத்தப்படும் பேப்பர் தட்டுகளை உபயோகிக்கிறோம்.வாரம் இருமுறை வெளியில் இருந்து உணவு வாங்கி சாப்பிடுகிறோம். வாரம் ஒருமுறை மட்டுமே வாஷிங் மிஷின் பயன்படுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.