19 children were treated after the death of a boy who ate panipuri | பானிபூரி சாப்பிட்ட சிறுவன் பலி 19 குழந்தைகளுக்கு சிகிச்சை

தாவணகெரே, ரம்ஜான் நோன்பு துவங்கி உள்ளதால், மாலை நடக்கும் தொழுகைக்கு பின்னரே முஸ்லிம்கள் உணவு உட்கொள்வர். இதனால், தொழுகை நடக்கும் மசூதிகளின் அருகில் பல்வேறு வகையான சிற்றுண்டி கடைகள் அமைக்கப்படும்.

கர்நாடக மாநிலம், தாவணகெரே மாவட்டம், ஹரிஹராவின் மலேபென்னுாரில் உள்ள ஜாமியா மசூதி அருகில் கடந்த 14ம் தேதி மாலை தொழுகை முடித்து, முஸ்லிம்கள் உணவு சாப்பிடச் சென்றனர்.

அவர்களுடன் வந்த சிறார்கள் சிலர், அப்பகுதி தள்ளுவண்டியில் விற்கப்பட்ட பானிபூரியை வாங்கி சாப்பிட்டுள்ளனர்.

இதில், ஹஸ்ரத் பிலாலின் மகன் இர்பான், 6, என்ற சிறுவனுக்கு 15ம் தேதி அதிகாலை 2:00 மணியளவில் வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதேபோல, பானிபூரி சாப்பிட்ட மேலும் 19 சிறார்கள், வாந்தி, பேதி, வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவசர சிகிச்சை பிரிவில் சிறுவன் இர்பானுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தும் முன்னேற்றம் ஏற்படாததால், தனியார் மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றனர். ஆயினும், சிகிச்சை பலனின்றி இர்பான் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தான்.

சிறுவனின் தாத்தா ஷேர் அலி கூறுகையில், ”தொழுகை முடிந்து, வெளியே தள்ளுவண்டியில் விற்பனை செய்யப்பட்ட பானிபூரியை வாங்கி சாப்பிட்டதால் தான், என் பேரன் உயிரிழந்தான்.

பானிபூரி விஷமானதால் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மாலேபென்னுார் போலீசில் புகார் அளித்து உள்ளோம்,” என்றார். சம்பவத்தை அடுத்து, பானிபூரி விற்பனை செய்தவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதற்கிடையில், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குழந்தைகளில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.