The court directed Ramdev to appear in person who did not answer the question | கேள்விக்கு பதிலளிக்காத ராம்தேவ் நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு

புதுடில்லி, தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக, அவமதிப்பு நோட்டீசுக்கு பதிலளிக்க தவறிய, ‘பதஞ்சலி’ நிறுவனத்துக்கு கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் ராம்தேவ் நேரில் ஆஜராகும்படி, ‘சம்மன்’ அனுப்பி உள்ளது.

பிரபல யோகா குரு ராம்தேவின், ‘பதஞ்சலி’ நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

குணப்படுத்தவே வாய்ப்பில்லாத நாள்பட்ட நோய்கள், மரபணு நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களையும், பதஞ்சலி தயாரிக்கும் ஆயுர்வேத மருந்துகள் குணப்படுத்தும் என, அந்நிறுவனம் விளம்பரம் செய்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் இந்திய மருத்துவ சங்கம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை கடந்த ஆண்டு நவம்பரில் விசாரித்த உச்ச நீதிமன்றம், சர்ச்சைக்குரிய விளம்பரங்களை நீக்கும்படி பதஞ்சலி நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.

இது தொடர்பான வழக்கை, கடந்த மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம், சர்ச்சைக்குரிய விளம்பரங்களை நீக்காத பதஞ்சலி நிறுவனத்துக்கு கண்டனம் தெரிவித்தது.

மேலும், பதஞ்சலி நிறுவனம் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது? எனக் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில் நேற்று, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோஹ்லி, ஏ.அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:

இந்த வழக்கில், நாங்கள் அனுப்பிய நோட்டீசுக்கு பதஞ்சலி நிறுவனம் ஏன் இன்னும் பதிலளிக்கவில்லை? உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏன் தொடரக்கூடாது?

வழக்கின் அடுத்த விசாரணையின் போது, பதஞ்சலி நிர்வாக இயக்குனர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா, இணை நிறுவனர் ராம்தேவ் நேரில் ஆஜராக வேண்டும். இது தொடர்பாக அவர்களுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.