சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று (21) பி.ப 4.30 மணிக்கு

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கந்த 19 முதல் இன்று (21) வரை மூன்று நாள் விவாதமாக நடத்துவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

  • 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப 12.30 முதல் எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ‘நெல் அறுவடையை விற்பனை செய்தல் உள்ளிட்ட விவசாயிகள் முகங்கொடுக்கும் ஏனைய பிரச்சினைகள்’ குறித்து எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணையை விவாதிக்கத் தீர்மானம்
  • மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணை அன்றையதினம் மு.ப 9.30 மணி முதல் பி.ப 12.30 மணிவரை
  • ஏப்ரல் முதலாவது பாராளுமன்ற அமர்வு வாரத்துக்கான கூட்டம் ஏப்ரல் 1, 2ஆம் திகதிகளில்

சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதத்துக்கு இன்று (21) வியாழக்கிழமையையும் ஒதுக்குவதற்கு சபாநாயகர் தலைமையில் (19) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

நம்பிக்கையில்லா தீர்மானத்தை மார்ச் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்ததுடன், புதிய தீர்மானத்துக்கு அமைய இவ்விhதம் 19,20 மற்றும் 21 ஆகிய மூன்று தினங்கள் விவாதிக்கப்படவுள்ளது. இது குறித்த வாக்கெடுப்பை இன்று (21) பி.ப 4.30 மணிக்கு நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கௌரவ சபாநாயகர் விசேட உரையொன்றை பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார். அத்துடன், இன்று (21) முன்னெடுக்கப்படவிருந்த பாராளுமன்ற விவகாரங்கள் அடுத்த வாரத்தில் முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை, எதிர்க்கட்சிகள் முன்வைத்த பிரேரணைக்கு அமைய ‘நெல் அறுவடையை விற்பனை செய்தல் உள்ளிட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் ஏனைய பிரச்சினைகள்’ பற்றிய சபை ஒத்திவைப்பு விவாதம் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப 12.30 மணி முதல் பி.ப 6.00 மணிவரை நடத்தப்படவுள்ளது. மேலும் முன்னர் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய மறைந்த பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ எம்.கருணாரத்ன, கௌரவ பந்துல பஸ்நாயக்க மற்றும் கௌரவ (வைத்தியகலாநிதி) பி.எம்.பி.சிறில் ஆகியோர் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் அன்றையதினம் மு.ப 9.30 மணி முதல் பி.ப 12.30 மணிவரை எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

ஏப்ரல் மாதத்தின் முதுலாவது பாராளுமன்ற அமர்வுக்கான கூட்டங்களை ஏப்ரல் 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது. ஏப்ரல் மாதத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறை வாரத்தில் வருவதனால் இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்த இரு தினங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ள பாராளுமன்ற விவகாரங்கள் குறித்து எதிர்வரும் நாட்களில் தீர்மானிக்கவும் இணங்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.