மீண்டும் 3வது இடத்தில் களமிறங்கும் விராட் கோலி? ஆர்சிபி அணியில் அதிரடி மாற்றம்!

Royal Challengers Bengaluru vs Punjab Kings: பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகிறது. ஐபிஎல் 2024ன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வி அடைந்து இருந்தது ஆர்சிபி அணி. இன்று தனது சொந்த மைதானத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது.  காரணம் ஐபிஎல் 2024ல் இதுவரை நடந்து முடிந்துள்ள 5 போட்டிகளிலும் சொந்த மைதானத்தில் விளையாடிய அணிகள் வெற்றி பெற்றுள்ளது.  விராட் கோலி, ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ், கேமரூன் கிரீன், க்ளென் மேக்ஸ்வெல், ரஜத் படிதார் என தரமான பேட்டிங் ஆர்டர் கொண்டு இருந்தாலும் சென்னையில் ஆர்சிபி அணியால் வெற்றி பெற முடியவில்லை. அனுஜ் ராவத் மற்றும் தினேஷ் கார்த்திக் கடைசி கட்டத்தில் சிறப்பாக விளையாடியதால் 173-6 என்ற நல்ல ஸ்கோரை அடிக்க முடிந்தது. 

ஐபிஎல் 2024ல் ஆர்சிபியின் பந்துவீச்சு மிகப்பெரிய கவலையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் போட்டியில் பேட்டிங்கும் அதே நிலையில் தான் இருந்தது.  ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையில் தங்களது முதல் ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டும் சிறப்பானதாக இருக்க வேண்டும். தனது முதல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்க்கு எதிராக பெரிய வெற்றியைப் பெற்று பஞ்சாப் அணி இரண்டாவது போட்டியில் விளையாட உள்ளது.  இந்த போட்டி சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளதால் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. காரணம் மற்ற மைதானங்களை ஒப்பிடும் போது சின்னசாமி மைதானம் அளவில் சிறியது. எவ்வளவு ரன்கள் அடித்தாலும் இங்கு பத்தாது. இதனால் RCB தங்களின் விளையாடும் XIல் சில மாற்றங்களை செய்ய வாய்ப்புள்ளது. 

கடந்த சீசனில் சின்னசாமி மைதானத்தின் சராசரி ஸ்கோர் 196 ஆக இருந்ததால், இந்த மைதானத்தில் பந்துவீச்சாளர்கள் பெரிய அழுத்தத்தில் உள்ளனர்.  மேலும், இங்கு கடந்த ஆண்டு நடைபெற்ற 7 போட்டிகளில் மொத்தம் 130 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன.  ஆர்சிபி அணி சென்னைக்கு எதிரான தனது முதல் போட்டியில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டு விளையாடியது. ஆனால் பஞ்சாப் அணிக்கு எதிராக அதே அணியுடன் செல்ல வாய்ப்பு இல்லை.  மயங்க் தாகர் இந்த போட்டியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது. அதே சமயம் பவுலிங்கை வலுப்படுத்த ஆகாஷ் தீப் அல்லது சுயாஷ் பிரபுதேசாய் இடம் பெற வாய்ப்புள்ளது.  மேலும், கேமரூன் கிரீன் 4வது இடத்திலும், விராட் கோலி 3வது இடத்திலும் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  

ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும் ரஜத் படிதார் ஆகியோர் இன்னிங்ஸைத் தொடங்க வேண்டும், அதைத் தொடர்ந்து விராட் கோலி, கேமரூன் கிரீன், கிளென் மேக்ஸ்வெல் மற்றும் அனுஜ் ராவத் களமிறங்கலாம். தேவைப்பட்டால் தினேஷ் கார்த்திக்கை இம்பாக்ட் வீரராக பயன்படுத்தலாம். பவுலிங்கில் முகமது சிராஜ் சிஎஸ்கே அணிக்கு எதிராக சிறப்பாக பந்து வீசவில்லை. ஆனாலும் விளையாடும் லெவன் அணியில் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அல்சாரி ஜோசப் தேவையான பெர்பாமன்ஸை தராததால் அவருக்கு பதில் லாக்கி பெர்குசன் இடம் பெறலாம். கர்ண் ஷர்மா மற்றும் யாஷ் தயாள் ஆகியோர் தங்கள் இடங்களைத் தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.