Virat Kohli: "குடும்பத்துடன் செலவளித்த 2 மாதங்கள்…" – பிரேக் குறித்து முதன்முதலாக மனம்திறந்த கோலி

பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவர் வரை சென்று திரில்லாக வென்றிருக்கிறது பெங்களூர் அணி. இந்தப் போட்டியில் 77 ரன்களை அடித்திருந்த விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. விருதைப் பெற்றுவிட்டு கோலி நெகிழ்ச்சியாக பல விஷயங்களைப் பேசியிருந்தார். கூடவே தன் மேல் வைக்கப்படும் விமர்சனங்களுக்குமே நேரடியாக பதில் கொடுத்திருக்கிறார்.

Virat Kohli | விராட் கோலி

இந்த சீசனில் அதிக ரன்கள் அடித்தவருக்கான ஆரஞ்சு தொப்பியும் இப்போது விராட் கோலியிடமே இருக்கிறது. ஆட்டநாயகன் விருதையும் தொப்பியையும் வென்றுவிட்டு பேசிய விராட் கோலி, “(ரசிகர்களிடம்) அதிகமாக சந்தோஷப்படாதீர்கள். எனக்கு இந்த ஆரஞ்சு தொப்பியின் அருமை தெரியும். ஆனால், வெறுமென இரண்டு போட்டிகள்தான் முடிந்திருக்கின்றன.

ரசிகர்களுக்கும் எனக்குமான பந்தம் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. விளையாட்டில் அதிகமாக சாதனைகளையும் நம்பர்களையும் பற்றிப் பேசுவார்கள். ஆனால், நீங்கள் திரும்பிப் பார்க்கையில் அதையெல்லாம் விட நீங்கள் சேகரித்த நினைவுகள்தான் முக்கியமாக நிற்கும்

Virat Kohli | விராட் கோலி

ராகுல் டிராவிட்தான் இதை சொன்னார். இங்கு கிடைக்கும் அன்பு, பாசம், நட்பு, பாராட்டு, நம்பிக்கை இதெல்லாம்தான் அற்புதமானவை. இவைதான் என்றைக்கும் மறக்க முடியாதபடி நினைவில் நிற்கும். டி20 போட்டிகளில் ஓப்பனராக அதிரடியான தொடக்கத்தை கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆனால், விக்கெட்டுகள் வரிசையாக விழும்போது சூழலுக்கேற்ப ஆட வேண்டும். இந்த பிட்ச் கொஞ்சம் கடினமானதாகத்தான் இருந்தது. போட்டியை நின்று முடித்துக் கொடுக்காமல் போனதில் ஏமாற்றம்தான். இரண்டு மாத ஓய்வுக்குப் பிறகு ஆடுவதால் இது ஒன்றும் மோசமான இன்னிங்ஸ் எல்லாம் இல்லை.

டி20 கிரிக்கெட்டை விளம்பரப்படுத்தும் நோக்கில் பேசப்படும் பேச்சுகளில் மட்டுமே என் பெயர் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் எனக்குள் அதையும் தாண்டி வெளிக்காட்ட நிறைய இருக்கிறது.

Virat Kohli | விராட் கோலி

இயல்பான மனிதர்களாக உணர்வதற்காக இரண்டு மாதங்கள் வெளிநாட்டிற்குச் சென்று வந்தோம். குடும்பத்துடன் நேரம் செலவிட்டது பேரானந்தமாக இருந்தது. குடும்பத்துடன் நேரம் செலவிடும் வாய்ப்பை கொடுத்த கடவுளுக்கு என்றென்றும் நன்றிக்கடன்பட்டிருப்பேன். சாதாரண மனிதராகத் தெருவில் இறங்கி யாராலும் அங்கீகரிக்கபடாமல் நடந்து சென்ற தருணங்கள் அற்புதமானதாக இருந்தன. தொடர்ச்சியாக நான் ஆடும் அணிக்காக சிறப்பாகச் செயல்பட்டு என் சிறப்பான பங்களிப்பை அளிப்பேன் என்பதை உறுதியாகக் கூறுகிறேன்” என்றார்.

Virat Kohli | விராட் கோலி

கடந்த 2 மாதங்களாக ஓய்விலிருந்த நாள்களைப் பற்றி கோலி இப்போதுதான் முதல் முறையாகப் பேசுகிறார். மேலும், கோலி டி20 போட்டிகளுக்கு செட் ஆகமாட்டார் என்கிற விமர்சனங்களுக்கும் நேரடியாகப் பதில் கொடுத்திருக்கிறார். கோலியின் பேச்சைப் பற்றிய உங்களின் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.