IMF உடன்படிக்கையை மாற்ற முயற்சித்தால் சர்வதேச நாடுகள் கடன் கடிதத்தை ஏற்க மறுக்கும்

ஒரு நாடு சர்வதேச நாணய நிதியத்துடனான நிரந்தர கடன் உடன்படிக்கையை மாற்றுவதற்கோ அல்லது திருத்துவதற்கோ முற்பட்டால், அந்நாடுகள் முன்வைக்கும் கடன் கடிதத்தை சர்வதேச நாடுகள ஏற்க மறுக்கும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்துடனான நிரந்தர கடன் உடன்படிக்கையை மாற்றுவதாகவோ அல்லது திருத்துவதாகவோ எவரேனும் கூறினால், அவரால்; இரண்டு வாரங்கள் கூட இலங்கையில் அரசாங்கத்தை அமைக்க முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (26) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட ஊடகவியலாளர் ஒருவர், ஆட்சிக்கு வரவுள்ள தலைவர்கள் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்ட உடன்படிக்கைகளை மாற்றுவோம் என்று கூறுகின்றனர்; அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? அதற்கான நிபந்தனைகள் உண்டா? என்ற கேள்வியை எழுப்பியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

மேலும், இந்தக் கடன்கள் இலங்கை அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டவையே தவிர, கடனைத் திருப்பிச் செலுத்துவது தொடர்பாகப் பேரம் பேசி கடன் உடன்படிக்கைகளை மேற்கொள்ளும் தனிநபர்களால் அல்ல என்றும், இலங்கை அரசாங்கம் என்று சொல்லும் போது, தற்போதுள்ள அரசாங்கமும் வருங்கால அரசாங்கங்கமும் என்பதால், அவர்களும் அதே பொறுப்புகளுக்குக் கட்டுப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச விதிகளை மதிக்காது தன்னிச்சையான முடிவுகளை எடுக்கும் நாடு, பெரும் அழிவை சந்திக்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை சிறிதளவேனும் மாற்றினால், நாம் வழங்கும் சர்வதேச கடன் கடிதங்களை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளாது, அப்படியானால், எமக்கு கனிம எண்ணெய், மருந்து வகைகள், உரங்கள், இரசாயனங்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள். ஏன்பன கிடைக்காது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஒரு நாடு குறைந்தபட்சம் சர்வதேச கொடுப்பனவு தீர்வுகளுக்கு உடன்பட வேண்டும் எனவும், எந்தவொரு நபரும் தனது நாட்டுக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான உடன்படிக்கைகளை ஆராய வேண்டுமாயின், சர்வதேச நாணய நிதியத்தின் இணையத்தளத்திலிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.