ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி பரிதாப உயிரிழப்பு: முதல்வர் இரங்கல்; வைகோ அஞ்சலி

ஈரோடு/ சென்னை: விஷ மாத்திரை கரைசலை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 77.

ஈரோடு எம்.பி.யான அ.கணேசமூர்த்தி, ஈரோடு பெரியார் நகரில் வசித்து வந்தார். இவரது மனைவி பாலாமணி காலமாகிவிட்டார். இவருக்கு கபிலன் என்ற மகன், தமிழ்பிரியா என்ற மகள் உள்ளனர். கடந்த 24-ம் தேதி விஷ மாத்திரை கரைசலை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற கணேசமூர்த்தி, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை உயிரிழந்தார்.

சொந்த ஊரான சென்னிமலை குமார வலசு கிராமத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக எம்.பி. கனிமொழி, அமைச்சர்கள், எம்.பி.க்கள், ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ, கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன், துரை வைகோ உட்பட பலரும் கணேசமூர்த்தி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

முதல்வர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில், ‘அரசியல் பயணத்தை திமுகவில் தொடங்கி, மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்த கணேசமூர்த்தி, பின்னர் மதிமுகவில் வைகோவுடன் இணைந்து பயணித்தார்’ என்று குறிப்பிட்டுள்ளார். கி.வீரமணி, பழனிசாமி, ஓபிஎஸ், அண்ணாமலை, செல்வப்பெருந்தகை, ராமதாஸ், முத்தரசன், ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.