IPL 2024: ராஜஸ்தான் வெற்றி… குஷியில் சிஎஸ்கே ரசிகர்கள் – ஏன் தெரியுமா?

IPL 2024 Points Table, LSG vs RR: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் நடைபெற்று வருகிறது. இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெற்ற நிலையில் மாலை போட்டியில் டெல்லி அணி மும்பையை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இரவு நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் அணி லக்னோ அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தி வீழ்த்தி உள்ளது. 

ராஜஸ்தான் அணி தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் நிலையில், லக்னோ அணி கடந்த இரு போட்டிகளிலும் சென்னை அணியை வீழ்த்திய பலத்துடன் இந்த போட்டியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச, லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்களை எடுத்தது. 

கலக்கிய சந்தீப் சர்மா

ராஜஸ்தான் அணி பந்துவீச்சில் சந்தீப் சர்மா அசத்தலாக வீசினார். அவர் 4 ஓவர்களில் (2 பவர்பிளே ஓவர்கள், 2 டெத் ஓவர்கள்) 31 ரன்களை மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மற்ற பந்துவீச்சாளர்கள் ஓவருக்கு 10 ரன்களுக்கும் மேல் கொடுத்துக்கொண்டிருந்த நிலையில், இவரின் எகானமி 7.80 ஆகவே இருந்தது.  197 ரன்கள் என்ற சற்றே இமாலய இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.

ஆட்டத்தை முடித்து வைத்த சஞ்சு

ஜாஸ் பட்லர் – ஜெய்ஸ்வால் ஓப்பனிங் ஜோடி பவர்பிளேவில் 60 ரன்களை எடுத்தது. பட்லர் 34 ரன்களுக்கும், ஜெய்ஸ்வால் 24 ரன்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, அடுத்த வந்த ரியான் பராக் 11 பந்துகில்ல 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் சஞ்சு சாம்சன் – துருவ் ஜூரேல் ஆகியோர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆட்டத்தை முடித்துக்கொடுத்தனர். 

இந்த ஜோடி 62 பந்துகளில் 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. 19 ஓவர்களிலேயே இலக்கை அடைந்து ராஜஸ்தான் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சஞ்சு சாம்சன் 33 பந்துகளில் 7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 71 ரன்களை அடித்து ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். ஜூரேல் 34 பந்துகளில் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கலுடன் 52 ரன்களை அடித்திருந்தார். லக்னோ பந்துவீச்சில் யாஷ் தாக்கூர், ஸ்டாய்னிஸ், அமித் மிஸ்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். 

The #RR skipper ensuring his team get over the line in Lucknow#TATAIPL | #LSGvRR | @rajasthanroyals pic.twitter.com/7syPfrSuF

— IndianPremierLeague (@IPL) April 27, 2024

சிஎஸ்கே ஹாப்பி ஏன்…?

இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி 9 போட்டிகளில் 8இல் வென்று 16 புள்ளிகளுடன் முதலிடத்திலும், லக்னோ அணி 9 போட்டிகளில் 5இல் வென்று 10 புள்ளிகளுடன் 4வது இடத்திலும் உள்ளன. லக்னோவின் இந்த தோல்வி சிஎஸ்கேவின் பிளேஆப் வாய்ப்பை அதிகமாக்கி உள்ளது. சிஎஸ்கே அணி கடந்த இரு போட்டிகளில் லக்னோவிடம் தோல்வியடைந்ததால் சற்று பின்னடைவை சந்தித்தது. அந்த அணி தற்போது 8 போட்டிகளில் 4இல் வென்று 8 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. 

எனவே, நாளைய ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வென்றால் சிஎஸ்கே 4வது இடத்திற்கு சென்றுவிடும். அதுமட்டுமின்றி நல்ல ரன்ரேட்டில் வெற்றிபெறும்பட்சத்தில் ஹைதராபாத்தை கீழே தள்ளி 3வது இடத்தையும் பிடிக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை இன்றும் லக்னோ வென்றிருந்தால் அந்த அணி 2வது இடத்திற்கு சென்றிருக்கும், சிஎஸ்கே தற்போது 7வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கும். ஆனால், ராஜஸ்தானின் இந்த வெற்றியால் சிஎஸ்கே சற்று பெருமூச்சுவிடும் எனலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.