முரண்பாடுகளைத் தடுத்தல் மற்றும் தீர்க்கும்போது ஒரு கருவியாக பாராளுமன்ற இராஜதந்திரம் முன்னிலை பெற்றுள்ளது – ஜெனீவா மாநாட்டில் சபாநாயகர்

ஜெனீவாவில் நடைபெற்ற அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் 148வது மாநாட்டில் கௌரவ சபாநாயகர் தலைமையிலான இலங்கை பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு பங்கேற்றுள்ளனர்.

சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இலங்கை பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு 2024 மார்ச் 23ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை சுவிட்சலாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்ற அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் 148வது மாநாட்டில் பங்கெடுத்தது.

பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ரஞ்சித் மத்தும பண்டார, கௌரவ அசோக் அபேசிங்க, கௌரவ சுமித் உடுகும்புர, கௌரவ மஞ்சுளா திஸாநாயக்க மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகித்தனர்.

“பாராளுமன்ற இராஜதந்திரம் : சமாதானம் மற்றும் புரிந்துணர்வு தொடர்பில் உறவுகளைக் கட்டியெழுப்பல்” என்ற தொனிப்பொருளின் கீழ் இம்மாநாட்டில் உரையாற்றிய சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிடுகையில், அரசாங்கங்களுக்கும், குடிமக்களுக்கும் இடையில் ஒரு பாலமாக பாராளுமன்ற இராஜதந்திரம் செயற்படுவதாகவும், வெளியுறவுக் கொள்கை உருவாக்கத்தில் மக்களின் தேவைகள் மற்றும் அபிலாஷைகளை இது கவனத்தில் கொள்வதாகவும் தெரிவித்தார். சமீபகாலமாக பாராளுமன்ற இராஜதந்திரம் முரண்பாடுகளைத் தடுக்கும் மற்றும் அவற்றுக்குத் தீர்வுகாணும் ஒரு கருவியாக முக்கியத்துவம் பெற்றுள்ளதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார். பாராளுமன்ற இராஜதந்திரிகள் சட்டவாக்க மட்டத்தில் நாடுகளுக்கிடையிலான உரையாடல் மற்றும் புரிந்துணர்வை எளிதாக்குவதன் மூலம் இணக்கமான உலகத்தை உருவாக்குவதற்கு பங்களிப்பதாக சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

இராஜதந்திரத் துறையில் பாராளுமன்ற இராஜதந்திரம் முக்கியமான பொறுப்புக்களை முன்னெடுப்பதாகவும் சபாநாயகர் மேலும் குறிப்பிட்டார். இன்னமும் விரிவாக ஆய்வுசெய்யப்படவில்லையென்றாலும், அண்மைக் காலத்தில் வெளிவிவகார மற்றும் சர்வதேச உறவுகள் குறித்த முரண்பாடுகளில் பாராளுமன்ற இராஜதந்திரத்தின் தலையீடு அதிகரித்திருப்பதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.
இலங்கைப் பாராளுமன்றத்தின் அனுபவம் குறித்துக் கவனம் செலுத்திய சபாநாயகர் 1949ஆம் ஆண்டு பெப்ரவரி 9ஆம் திகதி இலங்கை அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்துடன் இணைந்துகொண்டதாகக் குறிப்பிட்டார். அன்றிலிருந்து இலங்கை அனைத்துப் பாராளுமன்ற ஒன்றியத்தின் மாநாடுகளில் கலந்துகொண்டுவருவதாகவும், மாநாடுகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதற்கான வாய்ப்பு இலங்கைக்குக் கிடைத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், வெளிநாட்டு உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு மற்றும் வெளிவிவகார அமைச்சுசார் ஆலோசனைக் குழுவுக்கு வெளிநாட்டுக் கொள்கை பற்றிய அனைத்துப் பிரிவுகளையும் விசாரணை செய்வதற்கும், சட்டவாக்க செயற்பாடுகள் மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் திணைக்களங்கள், நிறுவனங்களின் செலவீன மதிப்பீடுகளை ஆராய்வதற்கும் அதிகாரங்கள் இருப்பதாக சபாநாயகர் இங்கு தெரிவித்தார்.

இதேவேளை, இங்கு நடைபெற்ற ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள், சமாதானம் மற்றும் சர்வதேச பாதுகாப்பு, நிலையான அபிவிருத்தி போன்ற துறைசார்  குழுக்கள் மற்றும் பாராளுமன்ற ஒன்றியங்களில் பங்கேற்பது குறித்த தமது அனுபவங்களையும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பகிர்ந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.