RCB vs KKR: ஆஹா கண்கொள்ளா காட்சி… விராட் கோலியை கட்டிபிடித்த கௌதம் கம்பீர்!

IPL 2024 RCB vs KKR: ஐபிஎல் தொடரின் 10ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று மோதியது. கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். கொல்கத்தா அணியில் நிதிஷ் ராணா, சுயாஷ் சர்மாவுக்கு பதில் அனுகுல் ராய் மற்றும் அங்கிரிஷ் ரகுவன்ஷி ஆகியோர் இடம்பிடித்தனர். ஆர்சிபி அணியில் இம்பாக்ட் பிளேயராக இப்போட்டியில் வைஷாக் விஜயகுமார் இரண்டாம் இன்னிங்ஸில் களமிறங்கினார்.

முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணிக்கு விராட் கோலி சற்றே நல்ல தொடக்கம் கொடுத்தாலும், கேப்டன் டூ பிளெசி ஹர்ஷித் ராணா ஓவரில் சிக்ஸர் அடித்து அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். கேம்ரூன் கிரீன், விராட் கோலிக்கு நல்ல துணையாக நின்று 21 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களை கொடுத்து 33 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். 

விராட் கோலி மிரட்டல் 

மேக்ஸ்வெல்லும் ஆரம்பத்தில் இருந்தே திணறிவந்தார். ரமன்தீப் சிங் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் தலா ஒரு கேட்ச்களை தவறிவிட்டாலும் மேக்ஸ்வெல் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். ரஜத் பட்டிதார் இம்முறையும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அனுஜ் ராவத்தும் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, தினேஷ் கார்த்திக் 6ஆவது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிந்தாலும் விராட் கோலி வைராக்கியமாக நின்று அரைசதம் கடந்தார்.

கடைசி கட்ட ஓவர்களில் தினேஷ் கார்த்திக்கும் பவுண்டரிகளை பறக்கவிட்டு ஆர்சிபி அணியின் ஸ்கோர் சற்றே உயர உதவினார் எனலாம். விராட் கோலியும் கடைசி கட்ட ஓவர்களில் சில பவுண்டரிகளை அடிக்க ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 182 ரன்களை எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்தது. கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக் ரன்அவுட் ஆனார். விராட் கோலி 59 பந்துகளில் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 83 ரன்களையும், தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 3 சிக்ஸர்கள் என 20 ரன்களை எடுத்தார்.

கொல்கத்தா அணி பந்துவீச்சில் ஹர்ஷித் ராணா, ஆன்ட்ரே ரஸ்ஸல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். தொடர்ந்து, 183 ரன்கள் என்ற இலக்குடன் கொல்கத்தா அணி அதிரடியான தொடக்கத்தை கொடுத்துள்ளது. அந்த அணி பவர்பிளே ஓவர்களில் மட்டும் 85 ரன்களை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

– The Hug moments of Virat Kohli and Gautam Gambhir at Chinnaswamy. pic.twitter.com/OAmtorcyg0

— CricketMAN (@ImTanujSingh) March 29, 2024

விராட் கோலி – கம்பீர் சந்திப்பு

இதற்கிடையில் 16 ஓவர்கள் முடிந்த உடன் டிரிங்ஸ் இடைவேளை கொடுக்கப்பட்டது. அப்போது விராட் கோலியும், கௌதம் கம்பீரும் சந்தித்துகொண்டபோது, இணக்கமாக ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து அன்பு பாராட்டினர். இவர்களுக்கு இடையில் கடந்தாண்டு ஆர்சிபி – லக்னோ போட்டியின் போது மோதல் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

அதே போட்டியில்தான், ஆப்கன் வீரர் நவீன் உல்-ஹக் உடனும் விராட் கோலிக்கு மோதல் ஏற்பட்டது. உலகக் கோப்பை தொடரின்போது, விராட் கோலி – நவீன் உல்-ஹக் சமாதானம் அடைந்த நிலையில், தற்போது விராட் கோலி, கௌதம் கம்பீர் இடையே சமாதானம் ஏற்பட்டுள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.