மயங்க் யாதவின் ஜெட்வேக பந்துவீச்சு! சிஎஸ்கே தவறவிட்ட தங்கம் லக்னோவில் ஜொலிக்குது

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 150 கிலோ மீட்டருக்கும் மேல் பந்துவீசி தீப்பொறிபோல் தெறிக்கவிட்டிருக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் 21 வயதே ஆன இளம் வேகப்புயல் மயங்க் யாதவ் அனைவரது கவனத்தையும் ஈர்த்துவிட்டார். சும்மா சொல்லக்கூடாது, மயங்க் போட்ட பந்துகள் எல்லாமே ஜெட்வேகத்தில் சென்றது. பேட்டிங் ஆடிக் கொண்டிருந்த பஞ்சாப் கிங்ஸ் வீரர்கள் ஷிகர் தவான், பேரிஸ்டோவ் ஆகியோரே வியந்து பார்த்தனர். அவர்கள் பேட்டை அசைப்பதற்குள் பந்து விக்கெட் கீப்பர் டிகாக்கிடம் தஞ்சமடைந்தது. விக்கெட் கீப்பர் டிகாக்கும் மெய்சிலிர்த்து மயங்க் யாதவை பாராட்டினார். அந்தளவுக்கு துல்லியமான வேகப்பந்துவீச்சாக இருந்தது அவருடையது.

உம்ரான் மாலிக் அதிவேகம் வீசக்கூடிய பந்துவீச்சாளராக பார்க்கப்பட்ட நிலையில், அதிக ரன்களை அவர் கொடுத்ததால் இந்திய 20 ஓவர் அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் போனது. இப்போது அந்த இடத்துக்கு வந்துவிட்டார் மயங்க் யாதவ். முதல் ஓவர் வீசிய தொடங்கிய மயங்க் யாதவ் 147, 146, 150, 141, 149, 156, 150, 142, 144, 153, 149, 152, 149, 147, 145, 140, 142, 153, 154, 149, 142, 152, 148 என வேகத்தை வீசி பந்தை தெறிக்க விட்டுக் கொண்டிருந்தார். அவர் மொத்தம் 4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். மயங்கின் அபார பந்துவீச்சு காரணமாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.

இதனையடுத்து போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் மயங்க். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அவருடைய அணியில் இடம்பிடித்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் இளம் வீரர் ஷமர் ஜோசப்பை அழைத்து ஆட்டநாயகன் விருதுடன் மயங்க் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்தப் போட்டிக்குப் பிறகு பேசியிருக்கும் மயங்க் யாதவின் பயிற்சியாளர், அவர் பந்துவீச்சில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் என புகழாரம் சூட்டியுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சு ஜாம்பவான் பிரெட் லீயும் மயங்க் யாதவுக்கு பாராட்டுகளை தெரிவித்திருப்பதுடன், இந்திய அணி தரமான வேகப்பந்துவீச்சாளரை கண்டுபிடித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிக்கு முன்பாக சென்னை, டெல்லி உள்ளிட்ட அணிகள் நடத்திய பயிற்சி கேம்பில் மயங்க் யாதவ் கலந்து கொண்டார். அப்போது அவருடைய பந்துவீச்சை சிஎஸ்கே, டெல்லி அணி பார்த்து நல்ல அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தாலும் ஏலத்தில் எடுக்க முனைப்பு காட்டவில்லை. இதனை பார்த்த லக்னோ சூப்பர் ஜெயண்டஸ் அணி வெறும் 20 லட்சம் ரூபாய் விலையில் அவரை தங்களது அணியில் எடுத்துக் கொண்டது. அதற்கான ரிசல்டை பஞ்சாப் அணிக்கான போட்டியில் காண்பித்துவிட்டார் மயங்க். ஐபிஎல் போட்டிக்குப் பிறகு நடைபெற இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியிலும் இவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்றும் குரல்கள் இப்போது ஒலிக்க தொடங்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.