‘அமலாக்கத் துறையும் எங்கள் கிளையன்ட்’ – ஐபோன் கிரேக்கிங் நுட்பம் கொண்ட டிஜிட்டல் தடயவியல் நிறுவனம் தகவல்

புதுடெல்லி: ஐபோன் கிரேக்கிங் அக்சஸ் கொண்டுள்ள டிஜிட்டல் தடயவியல் நிறுவனத்தின் கிளையண்ட் பட்டியலில் அமலாக்கத் துறை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் வலைதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் இயங்கிவரும் அந்நிறுவனம் ‘நெக்ஸ்டெக்னோ ஜென்’ என அறியப்படுகிறது. இஸ்ரேல் நாட்டின் செலிபிரைட் டெக் நிறுவனத்துக்கு என பிரத்யேக பிரிவை தனியாக கொண்டுள்ளது அந்நிறுவனம். ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனை கிரேக் செய்யும் நுட்பத்தில் இந்நிறுவனம் உலக அளவில் ‘செலிபிரைட்’ பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் கடந்த மாதம் டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். ஹவாலா பணம் தொடர்பான ஆதாரங்கள் கேஜ்ரிவாலின் ஆப்பிள் ஐபோன் மற்றும் ஆப்பிள் மடிக்கணினியில் இருப்பதாக அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனால், கேஜ்ரிவால் அதன் கடவுச்சொல்லை (பாஸ்வேர்ட்) தெரிவிக்கவில்லை. அந்தச் சூழலில் அதனை ஹேக் செய்ய உள்ளதாக அண்மையில் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தெரிவித்தது.

தொடர்ந்து கேஜ்ரிவாலின் ஐபோன், லேப்டாப்பிலிருந்து தகவல்களை எடுத்துத் தருமாறு ஆப்பிள் நிறுவனத்திடம் அமலாக்கத் துறை உதவி கோரியது. அப்போது ஆப்பிள் நிறுவனம், ஐபோன் உரிமையாளர் நினைத்தால் மட்டுமே இதனை திறக்க முடியும் என்றும் தங்களால் முடியாது என்றும் கைவிரித்து விட்டதாகவும் தகவல் வெளியானது. ஏற்கெனவே சில உலகத் தலைவர்களின் ஐபோன்களில் இருந்து தகவல்களை எடுத்துத் தருமாறு கேட்டபோது ஆப்பிள் நிறுவனம் கைவிரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் நெக்ஸ்டெக்னோ ஜென் நிறுவனத்துடன் அமலாக்கத் துறைக்கு உள்ள தொடர்பு தெரியவந்துள்ளது.

செலிபிரைட்டின் ப்ராடெக்ட்கள் விசாரணை அமைப்புகளால் வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் அமைப்பு சார்ந்த நிலையான செயல்பாட்டு நடைமுறைகளுக்கு உட்பட்டு பயன்படுத்தப்பட வேண்டும் என அதன் செய்தித் தொடர்பாளர் கூப்பர் தெரிவித்துள்ளார். நெக்ஸ்டெக்னோ ஜென் நிறுவனத்தின் கிளையண்ட் பட்டியலில் பிஹார் காவல் துறை, கேரளா, கொல்கத்தா மற்றும் டெல்லி தடயவியல் ஆய்வகமும் இடம்பெற்றுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.