திருவனந்தபுரம் காங். வேட்பாளர் சசி தரூருக்கு மத்திய அமைச்சர் அவதூறு நோட்டீஸ்

திருவனந்தபுரம்: சமீபத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தன்னைப் பற்றி அவதூறு கருத்துகள் பரப்பியதாகக் கூறி, காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அவதூறு வழக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கேரளாவில் ஏப்ரல் 26-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் சசி தரூரை எதிர்த்து பாஜக சார்பில் ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார். இந்த நிலையில், அவர் அவர் சார்பில் இந்த அவதூறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த அவதூறு நோட்டீஸில், “சசி தரூரின் கருத்துகள் ராஜீவ் சந்திரசேகரின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் வாக்குக்கு பணம் கொடுக்கும் செயலில் ஈடுபட்டதாக கூறிய சசி தரூரின் கருத்து திருவனந்தபுரத்தில் உள்ள அனைத்து கிருஸ்தவ மக்களையும் அதன் தலைவர்களையும் அவமதிப்பதாக உள்ளது.

இத்தகைய கருத்துகள் 2024 மக்களவைத் தேர்தலில் சசி தரூருக்கு ஆதரவானதாகவும், பாஜக தலைவரின் பிரச்சாரத்தை பாதிப்பதாகவும் உள்ளது. மேலும், சசி தரூரின் கருத்துகள் தேர்தல் நடத்தை விதிகளை மீறுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘கடந்த ஏப்ரல் 6-ம் தேதி ராஜீவ் சந்திரசேகருக்கு எதிராக சசி தரூர் கூறிய அனைத்து கருத்துகளையும் திரும்பப் பெற வேண்டும். அதற்காக அச்சு, மின்னணு ஊடகங்களில் பகிரங்கமாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோட்டீஸ் கண்ட 24 மணி நேரத்துக்குள் பதில் அளிக்கத் தவறினால், சட்டத்தை மீறியதற்கான குற்றவியல் மற்றும் சிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.