டெல்லி அணிக்கு ஆபத்பாந்தவானாக வந்திருக்கும் ஜேக் மெக்குர்க்! யார் இந்த 22 வயது வீரர்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஐபிஎல் 2024 சீசன் தொடக்கம் வழக்கம்போல் மோசமாக அமைந்தாலும், லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணி ஆடிய விதம் ஒரு நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. எஞ்சிய போட்டிகளிலும் அந்த அணி இதே பாணியில் விளையாடும்பட்சத்தில் ஐபிஎல் 2024 சுற்றின் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும். டெல்லி அணி மீது இந்த நம்பிக்கை வந்திருப்பதற்கு காரணம் அந்த அணியின் மிடில் ஆர்டரில் புதிதாக என்ட்ரியாகியிருக்கும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 22 வயதே ஆன ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் தான். அவரின் அதிரடியில் தான் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான சேஸிங்கில் 11 பந்துகளை மீதம் வைத்து சூப்பரான வெற்றியை பெற்றிருக்கிறது.

முதலில் பேட்டிங் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுக்க, அதனை டெல்லி அணி 18.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியில் பிரித்திவி ஷா 32 ரன்கள், ரிஷப் பன்ட் 41 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலிய அணியின் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் 35 பந்துகளில் 55 ரன்கள் விளாசி அவுட்டானார். இதில் 2 பவுண்டரிகளும் 5 சிக்சர்களும் அடங்கும். குருணால் பாண்டியாவின் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 3 சிக்சர்களை பறக்கவிட்டு அமர்களப்படுத்தினார் ஜேக் மெக்குர்க். இவருடைய பேட்டிங் பாணி டெல்லி அணிக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. அதனால் தான் சேஸிங்கை சூப்பராக சேஸ் செய்திருக்கிறது.

ஃப்ரேசர்-மெக்குர்க் இளம் வயதில் இருந்தே அதிரடி பேட்ஸ்மேனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 2019 ஆம் ஆண்டு தான் முதன்முறையாக விக்டோரியா அணிக்காக லீக் விளையாட தொடங்கினார். 17 வயதில் 19வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பையில் அரைசதம் அடித்த அவர், அடுத்து நடைபெற்ற கிளப் லீக் போட்டியில் ஷெஃபீல்ட் ஷீல்ட் அணிக்காக ஆடி அற்புதமான அரைசதம் விளாசினார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் மற்றும் சதம் ஆகிய சாதனைகள் இப்போது இவர் வசம் தான் இருக்கின்றன. இந்த சாதனை இதற்கு முன்பாக ஏபி டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல் வசம் இருந்தது, அற்புதமாகவும் அதிரடியாகவும் ஆடி இந்த சாதனைகளை தகர்த்துள்ளார்.

லக்னோ அணிக்கு எதிரான போட்டி தான் மெக்குர்க் அறிமுக ஐபிஎல் போட்டியாகும். முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்து தன்னுடைய முத்திரை பதித்துள்ளார். அத்துடன் கிரிக்கெட் உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துவிட்டார். அடுத்தடுத்த போட்டிகளில் இதேபோன்றதொரு ஆட்டத்தை விளையாடும்பட்சத்தில் டெல்லி அணியின் வெற்றி சாத்தியமாகும், இவருக்கான ஐபிஎல் கிரிக்கெட்டின் மார்க்கெட்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்துவிடும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.