கடப்பா தொகுதியில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்

அமராவதி,

ஆந்திர பிரதேச மாநிலத்தில் 25 மக்களவை தொகுதி, 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் வரும் மே 13ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 18ம் தேதி தொடங்கியது. அதன்படி பல்வேறு வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் கடப்பா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது சர்மிளாவுடன் அவரது உறவினரும், கடந்த 2019 தேர்தலுக்கு முன்னதாக கொலை செய்யப்பட்ட ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டியின் மகளுமான சுனிதா உடன் இருந்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,”கடப்பா எம்.பி வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளேன். கடப்பா மக்கள் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி, விவேகானந்த ரெட்டி ஆகியோரை மறக்கவில்லை. அவர்களை மனதில் வைத்து இந்த முறை மக்கள் வாக்களிப்பார்கள் என நாங்கள் நம்புகிறோம்.” என்றார்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக இடுபுலுபாயாவில் உள்ள தனது தந்தை ராஜசேகர் ரெட்டியின் நினைவிடத்துக்கு சென்று வேட்பு மனுவை வைத்து சர்மிளா பிரார்த்தனை செய்தார். கடப்பா மக்களவை தொகுதியில், ஷர்மிளா ஆளும் ஒய்.எஸ்.ஆர். கட்சியின் வேட்பாளரும், உறவினருமான ஒய்.எஸ்.அவினாஷ் ரெட்டியை எதிர்த்து போட்டியிட உள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.