KKRvRCB: `தோல்வி… தொடர் தோல்வி… போராடித் தோல்வி' – ரசிகர்கள் குரல் கேட்கிறதா ஆர்.சி.பி?

இந்த ஐபிஎல் சீசனின் அனைத்து அணிகளும் தங்கள் பாதி போட்டிகளை முடித்து பரபரப்பான நிலையை அடைந்துள்ளது.

இதில் “என்ன பரபரப்பானால் எங்களுக்கு என்ன?” என்று கிணற்றில் போட்ட கல்லை போல கடைசி இடத்தில் இருக்கும் RCB ஆணியும், புள்ளிப் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறும் முனைப்பில் KKR அணியும் கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் பலபரிட்சை நடத்தினர். வழக்கமாக ஹோம் கிரவுண்டில் நடக்கும் மதியவேளை போட்டியில் பச்சை ஜெர்சியுடன் வரும் RCB இந்த முறை ஹோமில் மேட்ச் இல்லாத காரணத்தால் இந்த போட்டியை அதற்கு பயன்படுத்தி கொண்டனர். “கண்ணாடியை திருப்பினால் வண்டி ஒடுமா ஜீவா” என்ற ஏக்கத்தில் ஆர்சிபி ரசிகர்கள் இருக்க டாஸினை வென்ற பெங்களூரு முதலில் பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தது.

‘இனியும் ஆர்.சி.பி ஜெயிக்க வேண்டும் என்றால் கோலி பந்து வீச்சையும் தான் செய்ய வேண்டும்’ என்ற ரசிகர்களின் வாய்ஸ் கோலிக்கு கேட்டது போல முதல் ஓவரை போட அம்பயரிடன் தொப்பியைக் கழற்றிக் கொடுத்தார். ஆனால் அவ்வாறு சேட்டை செய்தாலும் பந்தினை சென்ற போட்டியில் வெளியே உக்கார வைக்கப்பட்ட சிராஜுடன் கொடுத்தார். ஆனால் அப்படி வந்த சிராஜினை 6,4 என மாஸாக வரவேற்றார் சால்ட். அவரை தான் இப்படி அடிக்கிறார் என்று பார்த்தால் `எவனா இருந்தாலும் நான் அடிப்பேன்’ என அடுத்தடுத்த ஓவரிலும் நரைனை ஒரு ஓரமாக நிக்கவைத்துவிட்டு பவுலர்களை துவைத்தார். குறிப்பாக பெர்குசனின் 5வது ஓவரில் 6,4,4,6,4 பின்கோட் போட்டு வானவேடிக்கை காட்டினார் சால்ட். இப்படி 14 பந்துகளில் 48 ரன்கள் அடித்து ரோலெக்ஸ் காமியோவைத் தந்த அவர் 5வது ஓவரில் சிராஜ் பந்தில் ரஜத் படித்தாரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பெரிதாக கனெக்ட் ஆகாமல் சிரமப்பட்ட நரைன் 10(15) சால்ட்டுக்கு வழித்துணையாக யாஷ் தயாளின் பந்தில் விக்கெட்டாகி வெளியேற, அதே ஓவரில் ரகுவன்ஷியும் 3(4) வெளியேறினார். இதனால் 6 ஓவர் முடிவில் 75-3 என்ற நிலையை அடைந்தது KKR.

KKRvRCB

இதனையடுத்து ஒன்று சேர்ந்த ஷ்ரேயாஸ், வெங்கடேஷ் ஐயர் கூட்டணி “சிக்ஸர்கள் வேண்டாம் ஃபோரே போதும்” என ரன்வேகத்தை சற்று குறைத்து விளையாடினர். இதனை சாதகமாகப் பயன்படுத்திய ஆர்.சி.பி வெங்கடேஷ் ஐயரின் விக்கெட்டை கிரீனைப் பயன்படுத்தி வீழ்த்தியது. இதன்மூலம் சென்ற சீசனில் ஹீரோவாக இருந்த ரிங்கு சிங்குக்கு இந்த சீசனில் ஹீரோவாக மற்றொரு வாய்ப்பு கிடைத்தது . ஆனால் சீறிய இடைவெளியில் பவுண்டரிகளை விரட்டியவர், பெர்குசன் வீசிய பந்தில் யாஷ் தயாளிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்த பந்தே ரஸல் புல் டாஸ் பந்தில் கேட்ச்சாக ஆர்.சி.பி ரசிகர்கள் ஆர்ப்பரித்து முடிப்பதற்குள் ” பொறு மெஷின் நிக்கட்டும்” என அவர்களது ஆட்டத்தை நிறுத்தியது டிஆர்எஸ் முடிவு. 16 ஓவர்கள் முடிவில் 155-5 என்ற நிலையை எட்டியது KKR. அடுத்த நாலு ஓவர்களில் வழக்கமான ஆர்.சி.பி மோடை ஆன் செய்த பவுலர்கள். “என்ன தம்பி அடிக்க வரேன்னு சொன்னீங்க வரவே இல்ல” என்பது போல ரன்களை வாரி வழங்கினர். இதில் ஷ்ரேயாஸ் ஐயர் 50(36) கிரீன் பந்தில் காலியானாலும், “ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை ” என்று ராமன்தீப் சிங் 24 (9) சிறப்பான ஜெயிலர் சிவராஜ்குமார் கேமியோவைக் கொடுத்தார். இதனால் 20 ஓவர் முடிவில் 222-6 என்ற இமாலய இலக்கினை செட் செய்தனர்.

இமாலய ரன் சேஸை நோக்கி கோலியும் டூபிளசிஸும் களத்துக்கு வந்தார்கள். ஹர்ஷித் ராணா வீசிய முதல் பந்திலே பவுண்டரியை விரட்டிய கோலி அதே ஓவரின் கடைசி பந்தை பறக்கவிட்டு ஆட்டத்தின் முதல் சிக்சர் கணக்கைத் தொடங்கினார். அடுத்து ஓவரை வீச வந்த ஸ்டார்க்கின் பந்தையும் லாங் ஆன் திசையில் வான வேடிக்கை நிகழ்த்திய கோலி, தரமான ஒரு தொடக்கத்தைக் கொடுக்கிறார் என்று நினைத்து முடிப்பதற்குள் ஹர்ஷித் ராணா பந்தில் பந்தில் கேட்ச் ஆனார். அது நோபால் என பெரும் சர்ச்சை எழுப்ப கோலி கடுமையாக அம்பையருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அதில் தோல்வியடைந்து வெளியேறினார். ” நீ போகாத… என்ன விட்டு” என அடுத்து டூபிளசிஸ் 7(7) அவரை பின்தொடர்ந்தார். இதன் பின்னர ரஜத் படித்தாருடன் ஜோடி சேர்ந்த வில் ஜெக்ஸ் பவர்பிளேயின் கடைசி ஓவரை 6,6,4,6 “எங்களிடமும் சீப்பு இருக்கு நாங்களும் சீவுவோம்” என வானவேடிக்கைகளை நிகழ்த்தினார்கள். குறிப்பாக வில் ஜாக்ஸ் 29 பந்துகளில் அரை சதத்தைக் கடந்தார். 9 ஓவர் முடிவில் 100 ரன்களை கடக்க ஆர்சிபியை கடக்க வைத்தார்.

அடுத்து ஓவரில் அவரிடம் ரிலே பேட்டனை வாங்கிய ரஜத் படித்தார் 4,6,6,4 என தனது பங்குக்கு போஸ்டல் பின்கோட் பணியினைத் தொடர்ந்தார். இதுநாள் வரையில் மிடில் ஓவரில் திணறிய RCBயை “தலை நிமிர்ந்து நடங்க பார்த்திபன்” என்று விரைவில் இலக்கை அடைய வைப்பார்கள் என்ற நிலைக்கு கொண்டுவந்தார்கள். ஆனால் 12வது ஓவரை வீச வந்த ரஸல், ஆட்டத்தின் திருப்புமுனையாக நங்கூரமாக ரன்களை சேர்த்த ஜோடியை ஜோடியாக ( படிதார் 52(23), ஜாக்ஸ் 55 (32) ) பெவிலியன் அனுப்பினார். இது போதாத குறையாக அடுத்த ஓவரில் நரைன், கிரீன் 6(4) , லோமர் 4(3) ஆகியோரை வெளியேற்ற “போதும் பார்த்திபன் இப்ப தலையை குனிஞ்சுக்கங்க” என்று 181-6 என்று தனது பழைய நிலைக்குத் திருப்பியது RCB.

வில் ஜாக்ஸ்

இதன் பிறகு டெத் ஓவர் அதிரடி வீரர் தினேஷ் கார்த்திக்கும், பிரபு தேசாயும் ஒன்று சேர்ந்தனர். பொறுமையாக விக்கெட் விழாமல் ஆடிய இவர்கள் 24 பந்துகளில் 42 ரன்களை சேர்க்க வேண்டும் என்ற நிலைக்கு கொண்டு வந்தார்கள். ஆனால் 18வது ஓவரில் பிரபு தேசாய் வெளியேற 24(18) தனி ஆளாக தினேஷ் கார்த்திக் போராட வேண்டிய சூழல் உருவானது. 12 பந்துகளில் 31 ரன்கள் அடிக்க வேண்டிய சூழல் உருவாக ரஸல் வீசிய 19வது ஓவரில் அவரது ஸ்லோ பந்துகளை அடிக்க திணறியே நின்றார் DK. ஆனாலும் 4, 6 என அந்த ஓவரின் இறுதி 3 பந்துகளில் அடுத்தடுத்து பவுண்டரிகளை அடிக்க ஆட்டத்தில் உயிர் இருக்கிறது என்ற நம்பிக்கையைக் கொண்டு வந்தார். ஆனால் ரஸலின் கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக் விக்கெட்டை பறிகொடுக்க 6 பந்துகளில் 20 அடிக்க வேண்டும் என்ற நிலைக்கு அணி வந்தது.

எல்லாம் முடிந்தது என்ற நிலையில் ஸ்டார்க் பந்தினை எதிர்கொண்ட கரண் ஷர்மா முதல் பந்தை சிக்ஸருக்கு அனுப்பினார். அடுத்த பந்தில் கீப்பர் கேட்சுக்கு அப்பீல் செய்ய ஆர்.சி.பிக்கு ஆதரவாக தீர்ப்பு வர, 4 பந்துகளில் 14 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. இந்தநிலையில் தொடர்ந்து 2 சிக்ஸர்களை பளார் என ஸ்கொயர் திசையில் அடித்து 2 பந்துகளில் 3 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலைக்கு அணியைக் கொண்டு வந்தார்.

சுலபமாக மேட்சினை ஜெயித்து விடுவார்கள் என்ற ஆசையை ஆர்.சி.பி ரசிகர்களுக்கு உருவானது. ஆனால் இந்த நிலையில் கரண் சர்மா ஸ்டார்க்கின் பந்தை ஓங்கி அடிக்க அது ஸ்டார்க்கின் கையிலே வந்து சிக்கியது. கடைசி பந்தில் 3 ரன்கள் என்ற நிலையில் பெர்குசன் 1 ரன் மட்டுமே சேர்க்க ஆர்.பி.பி ரசிகர்களின் இதயத்தை நொறுக்கும் விதத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது KKR. கடுமையாகப் போராடியும் சென்ற ஆட்டத்தைப் போல இன்றுமே தோல்வியடைந்தது RCB. 8 போட்டிகளில் 7 தோல்விகள் அடைந்த RCB ” ஈ சாலா கப் நமது இல்லை” என்ற தனது பரிதாபமான பராம்பரியத்தைத் தொடர்ந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடுமையாக போராடியும் எதனால் RCB தோல்வியை சந்திக்கிற காரணம் என்ன என நீங்கள் நினைப்பதை கமென்ட்டில் தெரிவியுங்கள்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.