குஜராத்: கர்ப்பிணிக்கு சிகிச்சையளிக்க மறுத்த மருத்துவர்… என்ன காரணம்?

மருத்துவர்கள், உயிர்களைக் காப்பாற்றும் கடவுளாக மதிக்கப்படுகின்றனர். இன்னொரு பக்கம், சில நேரங்களில், மருத்துவமனையில் நோயாளிகள் உயிரிழக்க நேரிடும்போது, கோபத்தில் டாக்டரை நோயாளிகளின் உறவினர்கள் அடித்து உதைத்து விடுகின்றனர்.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தில், டாக்டர் ஒருவர் கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க முடியாது என்று தெரிவித்து இருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. குஜராத் மாநிலம், வதோதராவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மகப்பேறு மருத்துவராகப் பணியாற்றி வருபவர் டாக்டர் ராஜேஷ் பாரிக். இதே மருத்துவமனையில் 30 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணி சிகிச்சைக்காக வந்திருந்தார். அவருக்கு, ராஜேஷ் பாரிக் சிகிச்சையளிக்கச் சென்றார். அதற்கு, அப்பெண்ணிற்கு சில டெஸ்ட்கள் எடுக்கவேண்டி இருந்தது.

ஆனால், இது குறித்து அப்பெண்ணிடம் தெரிவித்த போது. அவர் அந்தச் சோதனைகளை எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டார். இதையடுத்து, அப்பெண்ணிற்கு சிகிச்சையளிக்க மறுத்துவிட்டார் டாக்டர்.

தான் சிகிச்சையளிக்க மறுத்தது குறித்து டாக்டர் ராஜேஷ் பாரிக் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”நோயாளிகளுக்குத் தங்களது டாக்டரை தேர்வு செய்ய உரிமை இருக்கும்போது, எமர்ஜென்சியான சூழ்நிலையைத் தவிர்த்து, டாக்டர்களுக்கும் சிகிச்சையளிக்க மறுக்க உரிமை இருக்கிறது.

30 வயது கர்ப்பிணிக்கு நான் சிகிச்சையளிக்க மறுத்தேன். அதற்குக் காரணம், அப்பெண் மருத்துவம் சாராத நண்பர்கள் சிலரின் ஆலோசனைகளை கேட்டு எங்களது மருத்துவ ஆலோசனைகளை ஏற்கவில்லை. என்.டி.ஸ்கேன், டபுள் மார்கர் டெஸ்ட் எடுத்துக்கொள்ள மறுத்தார். எனவே தான் அவரிடம், வேறு டாக்டரிடம் சிகிச்சை எடுத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டேன். மகப்பேறு மருத்துவர்கள், கர்ப்பிணிகளின் உத்தரவுப்படி செயல்பட முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மகப்பேறு

டாக்டரின் கருத்துக்கு நெட்டிசன்கள் பல்வேறு விதமான கருத்துகளை பகிர்ந்துள்ளனர். ’டெஸ்ட் எடுக்கும் கிளினிக்கில் நீங்கள் கமிஷன் வாங்கவில்லை என்று அப்பெண்னிடம் தெரிவித்திருக்க வேண்டும். பெரும்பாலும், டாக்டர்கள் டெஸ்ட் எடுக்கப் பரிந்துரைக்கும் கிளினிக்கில் கமிஷன் பெறுவதாக கருத்து நிலவுகிறது’ என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொருவர் வெளியிட்டுள்ள பதிவில், ’டபுள் மார்கர் டெஸ்ட் அதிக செலவு மிக்கது. அதன் மூலம் அதிகப்படியான கமிஷன் கிடைக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

டாக்டரின் பதிவை 48 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். கர்ப்பிணிக்கு மருத்துவர் சிகிச்சை அளிக்க மறுத்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.