“இந்தியா’ கூட்டணியைப் பார்த்து பிரதமர் மோடி அச்சத்தில் உள்ளார்!’ – தொல்.திருமாவளவன்

நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் மீண்டும் போட்டியிட்டார். சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தலுக்கான மின்னணு வாக்கு இயந்திரங்கள் அரியலூரில் உள்ள கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தை பார்வையிடுவதற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்த தொல்.திருமாவளவன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தலுக்கான மின்னணு வாக்கு பட்டியல் அரியலூரில் வைக்கப்பட்டுள்ளது. அதை பார்வையிடுவதற்காக வந்துள்ளேன்.

திருமா

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்ட இடத்தில் சி.சி.டி.வி கேமராக்கள் அரை மணி நேரம் செயலிழந்துள்ளது. இதுபற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமார் தேர்தல் அலுவலரிடத்தில் புகார் மனு அளித்துள்ளார். இதே போல, நீலகிரி, ஈரோடு பகுதிகளில் சி.சி.டி.வி கேமராக்கள் செயலிழந்துள்ளன. சந்தேகத்திற்கு இடமான சில குளறுபடிகள் நடந்துள்ளன. அரியலூரில் பாதுகாக்கப்பட்டுள்ள சிதம்பரம் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களை விடுதலை சிறுத்தை கட்சியினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். அந்தந்த தொகுதிக்கான தேர்தல் அலுவலகம் சி.சி.டி.வி இயந்திரங்களை கண்காணிக்க வேண்டும், பராமரிக்க வேண்டும். சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் அவைகளை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

பிரதமர் மோடி அண்மை நாட்களாக பேசி வருகிற கருத்துக்கள், காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருக்கிறார் என்பதை காட்டுகிறது. அதை அவர் அவ்வப்போது வெளிப்படுத்துகிறார். அதற்கான சான்றுகள் அவரது உரைகளில் அமைந்துள்ளது. அவருடைய நிலையை மறந்து, பொறுப்பை மறந்து மிகவும் கீழிறங்கி போய் அவருடைய விமர்சனங்களை முன் வைக்கிறார். குறிப்பாக, தாலியை பறித்து இஸ்லாமியருக்கு கொடுத்து விடுவார் என்ற அளவுக்கு அவர் பேசுவது, அவரது பொறுப்புக்கு அழகல்ல. அது அவருடைய அச்சத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. அதேபோல், தொடக்கத்தில் இருந்து தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அதிர்ச்சி அளிக்கக்கூடும் வகையாக உள்ளது. இந்த பிரச்னையில் யார் மீது குற்றம் சுமத்தப்படுகிறதோ அவருக்கு விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்ப வேண்டும். அப்படி, பிரதமருக்கு அனுப்ப வேண்டிய தேர்தல் ஆணையம் அதற்கு மாறாக நட்டாவுக்கு அவர்களுக்கு அனுப்பியது ஏன் என்று விளங்கவில்லை.

பேட்டியளுக்கும் திருமாவளவன்

தேர்தல் ஆணையத்தின் இந்த அணுகுமுறை ஒரு சார்பாக இருக்கிறது. ஆளுங்கட்சிக்கு சாதகமான அணுகுமுறையாக இருக்கிறது. பிரதமரை விளக்கம் கேட்பதற்கு கூட தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது. மேலும், 5 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அதனால், தேர்தல் ஆணையம் சரியாக செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம். ஆந்திராவில் உள்ள நெல்லூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளேன். எங்களது வேட்பாளர்கள் ஆந்திராவில் போட்டியிடுகின்றனர். நாங்கள் போட்டியிடாத மற்ற தொகுதிகளில் நான் பிரசாரம் மேற்கொள்கிறேன். இதே போல் மகாராஷ்டிராவில் உள்ள தாராவில் போட்டியிடுகிற காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளேன்.

கெஜ்ரிவால்

மகாராஷ்டிராவில் லத்தூர் தொகுதியில் விடுதலைக் கட்சியின் சார்பில் வேட்பாளர் போட்டியிடுகிறார். அதேபோல், தெலங்கானாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் 7 தொகுதியில் போட்டியிடுகின்றனர். அங்கு பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறேன். மற்ற இடங்களில் காங்கிரஸ் போட்டியிடுகின்றன. அவர்களை ஆதரிக்கிறோம். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளபோது டெல்லி முதல்வரை கைது செய்திருப்பது சரியில்லை. ஏற்கனவே இதை சுட்டிக்காட்டி கண்டித்து இருக்கிறோம். முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும் கெஜ்ரிவால் அவர்களை நேரடியாக அமலாக்கத்துறை கைது செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.

ஹேமந்த் சோரன்

அதேபோல, ஹேமந்த் சோரன் அவர்களும் பொறுப்புள்ள பதவியில் இருக்கிறார். அவரையும் சிறை பிடித்துள்ளனர். இது தவறான முன்னுதாரணம் என்று அரசியல் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். நாடு எங்கேயோ போய் கொண்டிருக்கிறது. வழக்கு செய்த பிறகு அதன் பிறகு கைது செய்ய வேண்டிய துறையினரால் தான் கடந்த காலங்களில் கைது செய்திருக்கிறார்கள். ஆனால், இந்த முறை அமலாக்கதுறையினர் கெஜ்ரிவாலை கைது செய்திருப்பது அதிகாரப் போக்கை வெளிப்படுத்துகிறது. இந்த கைது நடவடிக்கைகளால், இந்தியா கூட்டணிக்கு எந்த பின்னடைவும் ஏற்படாது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இதனால் பின்னடைவு ஏற்படும். டெல்லியில் எல்லா தொகுதிகளும் காங்கிரஸ் – ஆம்ஆத்மி கூட்டணி கைப்பற்றும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.