சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்திற்காக பொதுவான சட்டம் கொண்டு வரப்படும்

• போட்டிமிக்க ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் மட்டுமன்றி, நிகர பூஜ்ஜிய உமிழ்வை நெருங்கும் பசுமைப் பொருளாதாரமும் இலங்கையின் இலக்காகும் – இலங்கை காலநிலை மாற்ற மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு.

சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றத்திற்காக ஒரேயொரு பொதுச் சட்டம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கும் போது, ஏற்றுமதி சார்ந்த போட்டிப் பொருளாதாரம் மட்டுமன்றி, 2050 ஆம் ஆண்டளவில் பூஜ்ஜிய உமிழ்வை அடையும் பசுமைப் பொருளாதாரமாக மாற்றியமைப்பதிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக இலங்கை எதிர்நோக்கும் கடும் வெப்பமானது எதிர்கால காலநிலை மாற்றத்தின் அடையாளம் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, காலநிலை மாற்றத்தைத் தணிக்க உடனடி கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் (07) ஆரம்பமான இலங்கை காலநிலை மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் முதன்முறையாக “எங்கள் கிரகத்திற்கும் எமது நாட்டுக்குமான காலநிலை நடவடிக்கை” (Climate Action for our Nation and the Planet)” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை காலநிலை மாற்ற மாநாடு நேற்று ஆரம்பமானதோடு மாநாடு மே 09 வரை நடைபெறவுள்ளது.

உலகளாவிய மற்றும் தேசிய கண்ணோட்டத்துடன் காலநிலை மாற்ற நெருக்கடியின் பல்வேறு அம்சங்களை ஆழமாகப் புரிந்துகொள்வது மற்றும் பொருளாதாரத்தின் முக்கிய துறைகளில் ஏற்படக்கூடிய இடையூறுகளை ஆராய்வதே இந்த காலநிலை மாநாட்டின் நோக்கமாகும்.

மாநாட்டில் குறைந்த உமிழ்வு மற்றும் காலநிலை – எதிர்ப்பு பொருளாதாரத்திற்கு மாறுவதற்கு செய்ய வேண்டிய கொள்கை மாற்றங்கள் குறித்து ஆராயப்படும்.

இலங்கையிலும் காலநிலை மாற்றம் தொடர்பான மையம் நிறுவப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, காலநிலை மாற்றத்தைத் தணிப்பதற்கான சட்டங்களை வகுப்பதில் உலக நிதி நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐக்கிய இராச்சியத்தின் காலநிலை மாற்றச் சட்டத்தை பின்பற்றுமாறு அதிகாரிகளுக்கு தான் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன், இந்துசமுத்திரம் மற்றும் வெப்பமண்டலப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் வகிபாகம் மற்றும் காலநிலை மாற்றத்தைக் கையாள்வதில் இலங்கையின் தலையீடு ஆகியவற்றை விளக்கிய ஜனாதிபதி, இலங்கையில் நிறுவப்படவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளையும் விளக்கினார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியதாவது:

”காலநிலை மாற்றத்துக்கு எதிரான அரசின் நடவடிக்கை குறித்து வர்த்தக சமூகத்துடன் ஆராய்வதற்கான இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

நான் ஜனாதிபதியாக பதவியேற்றது முதல், காலநிலை சவால்களை சமாளிக்கும் திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து வருகிறேன். அதற்காக எனது அலுவலகத்தில் காலநிலை மாற்ற மையம் உருவாக்கப்பட்டு அதற்கான ஆலோசகரும் நியமிக்கப்பட்டார்.

இதுவரை சுற்றுச்சூழலில் மட்டுமே எங்கள் கவனம் இருந்தது. ஆனால் அதில் காலநிலை மாற்றம் வகிக்கும் முக்கிய பங்கை நாம் புரிந்து கொள்ள வேண்டும். காலநிலை மாற்றம் மோசமானால் முழு சுற்றுச்சூழலும் சீர்குலைந்துவிடும். எனவே, காலநிலை மாற்றத்தை எவ்வாறு மாற்றியமைப்பது மற்றும் காலநிலை மாற்றத்திற்கு எதிராக எவ்வாறு போராடுவது என்பதில் நாம் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும்.

கடந்த சில நாட்களில் நாம் எதிர்கொள்ள வேண்டிய கடுமையான வெப்பம் எதிர்கால காலநிலை மாற்றத்தின் அறிகுறியாகும். நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதே ஜனாதிபதியாக எனது பணியாக இருந்தது. இதுவரை இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதால் அடுத்தகட்ட பணிகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

நாட்டின் தற்போதைய பொருளாதார முறைமையில் எம்மால் முன்னேற முடியாது. நான் முன்பு பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டது போல், நாம் அதிக போட்டித்தன்மை கொண்ட ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். அதற்கான புதிய சட்டத்தையும் உருவாக்கி இருக்கிறோம். மேலும் பொருளாதார மாற்ற சட்டம் அடுத்த வாரம் வர்த்தமானியில் வெளியிட எதிர்பார்க்கிறோம்.

2050ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடையும் இலக்கை இலங்கை அடைவதையும் இந்த பொருளாதார மாற்றச் சட்டம் உறுதி செய்கிறது. மேலும் அந்த காலப்பகுதிக்கு முன்னர் இலங்கை இந்த இலக்கை அடைய முடியும் என்று நான் நம்புகிறேன்.

எனவே, இந்நாட்டில் பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பதில், ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்குவது மட்டும் நோக்கமல்ல. நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடையும் இலக்கை அடைவதை அடிப்படையாகக் கொண்ட பசுமைப் பொருளாதாரமாக மாற்றுவதிலும் கவனம் செலுத்தியுள்ளோம்.

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான புதிய சட்டத்தையும் நாங்கள் உருவாக்கி வருகிறோம். சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் இரண்டையும் கையாளும் ஒரு சட்டத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளோம். இதன் ஊடாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தொடர்ந்து செயற்படும் அதேவேளை , காலநிலை மாற்றத்திற்கான மன்றம் அதில் உள்ளடக்கும். இந்தச் சட்டத்தை உருவாக்குவதற்கு தற்போதுள்ள பிரித்தானிய காலநிலை மாற்றச் சட்டத்தைப் பின்பற்றுமாறு அதிகாரிகளுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன். அத்துடன், காலநிலை மாற்றக் குழுவின் ஆலோசனையின் பேரில் செயற்படுவதும் பாராளுமன்றத்தில் ஒழுங்குவிதிகளை சமர்ப்பிப்பதும் அரசாங்கத்தினதும் சம்பந்தப்பட்ட விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரினதும் பொறுப்பாகும் .

நிதி நிறுவனங்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டமாக இருப்பதும் பிரித்தானிய காலநிலை மாற்ற சட்டத்தை பின்பற்ற ஒரு காரணம் எனலாம். எங்களிடம் உள்ள பல்வேறு மாற்றுவழிகளும், எங்கள் பசுமை நிதியியலும், நிச்சயமாக இங்கிலாந்து நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை என்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம். வர்த்தக சபை, பங்குச் சந்தை, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு அனைத்தும் அதற்கேற்ப இதனுடன் தொடர்புபடும்.

மேலும், இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன. சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரத்திற்கான இலங்கையின் கொள்ளளவு 30 – 50 ஜிகாவோட் வரையில் காணப்படுகிறது. எங்களிடம் உள்ள இந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களை பயன்படுத்தி பெரும் பயனை அடைய எதிர்பார்த்திருக்கிறோம்.

மேலும், நாட்டில் விவசாயப் பொருளாதாரத்தை உருவாக்கும் வகையில், விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம். காலநிலை மாற்றங்களை எதிர்கொள்வது என்பது குறித்த உடன்பாட்டை உலகளாவிய சமூகத்தினால் எட்ட முடியாமல் போயிருக்கிறது. காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் மாநாட்டில் (COP) இலங்கையும் பங்கேற்றது. அங்கு நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடந்தாலும் இறுதி உடன்பாடு எட்ட முடியவில்லை. அடுத்த இரண்டு சந்திப்புகளில் நாம் ஏதாவது ஒரு உடன்பாட்டுக்கு வர வேண்டும் அல்லது இதை கைவிட வேண்டும்.

ஆனால் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான மூன்று அடிப்படை நடவடிக்கைகளை இலங்கை மட்டுமே எடுத்துள்ளது. கடன் மறுசீரமைப்புக்கு ஆபிரிக்க நாடுகளுக்கு உதவ வேண்டும். கடன் நெருக்கடியில் இருந்து மீள ஆபிரிக்க நாடுகளுக்கு நிதி தேவைப்படுகிறது. இல்லையேல் அந்த கண்டத்தில் அழிவு ஏற்படும். நாங்கள் எங்கள் கடனை வெற்றிகரமாக மறுசீரமைத்துள்ளோம். மிகச் சிரமப்பட்டு அதை செய்திருக்கிறோம். அந்த சவாலை எதிர்கொள்ளும் திறன் இலங்கைக்கு இருந்தது. ஆனால் அதற்கு ஆதரவு தேவைப்படுபவர்களும் இருக்கிறார்கள்.

இரண்டாவதாக, கிளாஸ்கோவில் நடைபெற்ற மாநாட்டில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தேவைப்படும் நிதியை வழங்குவதாக உறுதி எடுத்திருந்தோம். ஆனால் சில காரணங்களால் அந்த பணம் கிடைக்கவில்லை. அல்லது அதைச் சேகரித்த வங்கிகள் நிதியை வழங்கவில்லை. ஆனால் எங்களுக்கு இந்த நிதி தேவை. எனவே அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் இதற்காக போராட வேண்டும். ஒரு பக்கம் போராட வேண்டும். மறுமுனையில் வணிக ரீதியான வளர்ச்சிக்கு தேவையான அனைத்தையும் செய்ய வேண்டும்.

இதனாலேயே இலங்கைக்குள் வெப்ப மண்டலம் தொடர்பான விடயங்களை குறிப்பிட்டுக் கூறியிருந்தேன். கார்பனை உறிஞ்சும் திறனை வெப்ப வலயம் அதிகமாக கொண்டுள்ளது. அதனால் காலநிலை மாற்றம் குறித்த பல்வேறு வணிகத் திட்டங்களுக்கான சாத்தியமும் வெப்ப வலயத்தில் காணப்படுகிறது.

மேலும், இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் (IORA) ஊடாக மேற்படி விடயம் சார்ந்து இந்து சமுத்திரத்தில் காணப்படும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். அதனால் வெப்ப வலயம் மற்றும் இந்து சமுத்திரத்திற்குள் மிகப்பெரிய கார்பன் உறிஞ்சும் பகுதியொன்று உருவாகும். அதற்காக இலங்கை முன் நின்று செயற்படும் என்பதோடு இதனால் பெரிய மாற்றம் ஏற்படும்.

காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவுவது தொடர்பில் பிராந்திய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதற்குத் தேவையான சட்டங்களையும் இலங்கை கொண்டு வரும். கொத்மலை பகுதியிலிருந்து சுமார் 600 ஏக்கரை ஏற்கனவே ஒதுக்கியிருப்பதோடு, அடுத்த வருடம் கட்டுமானப் பணிகளையும் ஆரம்பிக்க உள்ளோம்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

சென்னை IIT Madras Research Park இன் தலைவர் பேராசிரியர் அஷோக் ஜுன்ஜுவாலா (Prof. Ashok Jhunjhunwala), இந்திய எரிசக்தி சுற்றாடல் மற்றும் நீர்ச் சபையின் தலைமை நிறைவேற்று அதிகாரி பேராசிரியர் அருணபா கோஷ் (Dr. Arunabha Ghosh), ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி அசூசா குபோடா, கலாநிதி ரொஹான் பெதியாகொட, இலங்கை வணிகச் சபையின் தலைவர் துமிந்த ஹுலங்கமுவ, இலங்கை வணிக சபையின் காலநிலை அலுவல்கள் தொடர்பிலான செயற்பாட்டுக் குழுவின் தலைவரும் டில்மா வியாபார குழுமத்தின் தலைவருமான டில்ஹான் பெர்னாண்டோ, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஆனந்த மலவதந்திரி ஆகியோர் உட்பட இராஜதந்திரிகள், வெளிநாட்டு அமைப்புக்களின் பிரதிநிதிகள், வர்த்தகர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.