தமிழ்நாட்டில் கூகுள் செய்யும் பெரிய சம்பவம்… ஆப்பிளுக்கு ஆப்பு? – முழு பின்னணி

Google Pixel Manufacture In Tamilnadu: கூகுள் நிறுவனம் அதன் பிக்சல் ஸ்மார்ட்போன் தயாரிப்பை இந்தியாவில் தொடங்க திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் அதன் உற்பத்தி ஆலையை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த உற்பத்தி ஆலையை தொடங்க ஆப்பிள் மொபைல்களை தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் கூகுள் நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள் ஐபோன் மற்றும் சாம்சங்களின் தயாரிப்புகள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், தன்னுடைய தயாரிப்பான பிக்சல் ஸ்மார்ட்போனை இந்தியாவில் பரவலாக்க 
இங்கு ஆலையை அமைப்பது குறித்து அந்நிறுவனம் நீண்ட நாளாக திட்டமிட்டு வருகிறது. குறிப்பாக, உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் சந்தை என்றால் அது இந்தியாதான். இந்தியாவில் ஐபோன் உற்பத்தி பரவலாகி உள்ளது. அந்நிறுவனம் 2024ஆம் ஆண்டில் மட்டும் 14 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஐபோன்களை இந்தியாவில் உற்பத்தி செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த உற்பத்தியின் 7இல் 1 பங்கு ஆகும்.

ஆப்பிளை தொடர்ந்து கூகுள்…

ஆப்பிளை தொடர்ந்து கூகுளும் இந்திய சந்தையை பிடிக்க இந்த முயற்சியின் ஈடுபட்டிருக்கிறது. கடந்தாண்டு அக்டோபர் மாதமே கூகுள் நிறுவனம் அதன் பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ மாடல் ஸ்மார்ட்போன்களை இங்கு தயாரிக்க திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகின.

மேலும், பிக்சல் ஸ்மார்ட்போன் மட்டுமின்றி டிரான்கள் தயாரிப்பையும் தமிழ்நாட்டில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் (Alphabet) இதில் தீவிரம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆல்பாபெட் நிறுவனம் அதன் துணை நிறுவனமான Wing LLC உடன் இணைந்து தமிழ்நாட்டில் டிரான் தயாரிப்பில் ஈடுபட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனம் ஏற்கெனவே, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவில் டிரான் தயாரிப்புகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, கடற்படை ரோந்துக்கு பயன்படும் இலகுரக டிரான்கள் மற்றும் தானியங்கி டெலிவரி டிரான்கள் ஆகியவை இதன் முக்கியமான தயாரிப்புகளாகும். 

முன்னணியில் இருக்கும் தமிழ்நாடு

தமிழ்நாட்டில் ஆலை தொடங்குவது குறித்து தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா உள்ளிட்ட அதிகாரிகள் கடந்த வாரம் அமெரிக்காவில் கூகுள் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதை தொடர்ந்து, கூகுள் அதிகாரிகள் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, தமிழ்நாடு அரசுக்கும், கூகுள் நிறுவனத்திற்கும் இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வரவில்லை. 

சென்னையில் உள்ள HP நிறுவனத்துடன் கூகுள் நிறுவனம் அதன் Chromebooks லேப்டாப்களை தயாரிப்பு சார்ந்து கடந்தாண்டு கைக்கோர்த்தது இங்கு கவனிக்கத்தக்கது. குறிப்பாக, தமிழ்நாட்டில் அதன் உற்பத்திக்கான அனைத்து வசதிகளும் இருப்பதாக கூகுள் நினைப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக, ஃபாக்ஸ்கான், பெகாட்ரான் மற்றும் டாடா ஆகிய ஆப்பிள் ஐபோன் தயாரிப்பு நிறுவனங்களின் உற்பத்தி சூழலுக்கு தமிழ்நாடு ஒரு முக்கிய இடமாக உள்ளதாக கூறப்படுகிறது. 2023-2024 நிதியாண்டில் தமிழ்நாடு 9.56 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் எலெக்ட்ரானிக் பொருள்களை ஏற்றுமதி செய்துள்ளது. அதாவது இது நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 33% என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.