`கடற்கரை… அரண்மனை…' பாலிவுட் ஸ்டைலில் வரலட்சுமியின் கல்யாணம்… எங்கே நடக்கிறது தெரியுமா?

நடிகை வரலட்சுமிக்கும் அவரது நீண்ட நாள் நண்பரும் மும்பையில் ஆர்ட் கேலரி வைத்திருப்பவருமான நிக்கோலாய் சச்தேவிற்கும் வரும் ஜூலை மாதம் இரண்டாம் தேதி தாய்லாந்தில் வைத்துத் திருமணம் நடைபெறுகிறது.

பாலிவுட் நட்சத்திரங்களின் ஸ்டைலில் டெஸ்டினேஷன் திருமணமாக நடத்த முடிவெடுத்துள்ள நிக்கோலாய் சச்தேவ் -வரூ ஜோடி, திருமணத்துக்கான ஏற்பாடுகளை மும்முரமாகச் செய்து வருகிறார்கள். நடிகர் சரத்குமாரின் மகளும் முன்னணி கதாநாயகியுமான வரலட்சுமி சரத்குமாருக்கும் மும்பையைச் சேர்ந்த நிக்கோலாய்க்கும் கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

வரலட்சுமியால் ‘நிக்’ என செல்லமாக அழைக்கப்படும் நிக்கோலாயுடன் வரலட்சுமிக்கு பல ஆண்டுப் பழக்கமாம். ஆனால் எந்தவொரு இடத்திலும் தங்களைப் பற்றிய செய்திகள் வெளிவராத படி எப்படி இருவரும் பார்த்துக் கொண்டார்களோ தெரியவில்லை. நிக் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.

இவர்களது நிச்சயதார்த்தம் முடிந்ததுமே, நிக்கோலாயின் முதல் திருமணம் மற்றும் அவரது தோற்றம் குறித்து சமூக வலைதளங்களில் சிலர் எதிர்மறையான விமர்சனங்களை வைக்க, அவற்றிற்கு ரொம்பவே மெச்சூர்டாக ஒரு பதிலைத் தந்தார் வரூ. “என்னுடைய அப்பாவும் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டவர் தான். அவர் மகிழ்ச்சியாக இல்லையா? அதனால இதெல்லாம் ஒரு பிரச்னை இல்லை. இதுல தப்பும் இல்லை. நிக்கின் தோற்றம் பத்தி மத்தவங்க என்ன பேசுறாங்கங்கிறது எனக்கு முக்கியமில்லை. என் பார்வையில் அவர் ரொம்பவே அழகானவர் என்ற வரலட்சுமி, எங்களுக்கிடையிலான உறவு குறித்து நெகடிவ் கமென்ட் சொல்றவங்களைப் பத்தி நான் கவலைப்படுவதில்லை” என்றார்.

நிச்சயதார்த்தம் முடிந்து மூன்று மாதங்களாகிவிட்ட நிலையில், இவர்களது திருமண தேதி குறித்த அறிவிப்பை வரூவின் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது நமக்குக் கிடைத்த தகவலின் படி வரும் ஜூலை மாதம் இரண்டாம் தேதி இவர்களது திருமணம் தாய்லாந்தில் நடக்கவிருக்கிறதாம்.

வரலட்சுமி சரத்குமார்

”பாலிவுட் நடத்திரங்களின் ஸ்டைலில் திருமணத்தை டெஸ்டினேஷன் மேரேஜா நடத்த ஆசைப்பட்டிருக்கார் நிககோலாய். வரலட்சுமியும் இந்த ஐடியாவுக்கு ஓ.கே சொல்ல முன்னரே யோசிச்சு வச்சிருந்தபடி தாய்லாந்தைப் புக் செய்திருக்காங்களாம். சமீபமா உலகின் பல பகுதிகள்ல இருந்து காதல் ஜோடிகள் தாய்லாந்துல திருமணம் செஞ்சுக்க விருப்பப்பட்டு வர்றாங்க. நீண்ட, அழகான கடற்கரைகள், பிரமாண்டமான அரண்மனைகள், உலகப் பிரசித்தி பெற்ற தாய் உணவு முதலான அம்சங்கள் இந்தக் காதலர்களை ஈர்க்கறதாச் சொல்றாங்க.

பொருளாதார கோணத்துல பார்த்தா கல்யாணத்துக்கு ஆகிற செலவுகளுமே ரொம்ப ஒண்ணும் அதிகமில்லைனு சொல்லப்படுது. தாய்லாந்தைத் தேர்ந்தெடுத்ததுமே திருமணத்துக்கான மத்த ஏற்பாடுகளை விரைவு படுத்தத் தொடங்கிவிட்டாராம் நிக்கோலாய். மும்பை மற்றும் சென்னையிலிருந்து திருமனத்துக்குச் செல்ல இருக்கிறவர்களின் பயண ஏற்பாடுகளையுமே நிக்கின் உதவியாளர்கள்தான் கவனித்துக் கொள்கிறார்களாம்” என்கிறார்கள் வரலட்சுமிக்கு நெருக்கமான நட்பு வட்டத்தினர்.

எனினும், தாய்லாந்தில் நடக்கும் திருமணத்தில் நிக் மற்றும் வரூவின் வீட்டார் மற்றும் நெருங்கிய ஒரு சில நண்பர்களே கலந்து கொள்வார்களெனத் தெரிகிறது.

முன்னதாகத் திருமணத்துக்கு முந்தைய மெகந்தி நிகழ்ச்சி சென்னையில் தாஜ் நட்சத்திர ஓட்டலில் நடக்கவிருப்பதாகவும் தொடர்ந்து திருமணத்துக்குப் பிந்தைய வரவேற்பு சென்னையில் லீலா பேலஸ் மற்றும் இன்னொரு நட்சத்திர ஓட்டலிலும் நடக்கவிருக்கிறதாம்.

ஆக மொத்தத்தில் திருமணத்தின் போதான அழகிய வெட்கத் தருணங்களை வரவேற்கத் தயாராகி விட்டார் வரலட்சுமி சரத்குமார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.