"வேர்டில் ஸ்கோர்" வரலையே.. மம்மிக்கு என்னாச்சோ.. பதறிய மகள்.. மீட்கப்பட்ட பாட்டி!

வேர்டில் விளையாட்டு
ஒரு மூதாட்டியின் உயிரைக் காப்பாற்றியுள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. நம்பித்தான் ஆக வேண்டும் பாஸ். அமெரிக்காவில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

வேர்டில் என்பது ஒரு வார்த்தை விளையாட்டு.. அதாவது ஒரு வார்த்தையைக் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு உங்களுக்கு 6 சாய்ஸ் தரப்படும். நீங்கள் கண்டுபிடிக்க கண்டுபிடிக்க உங்களுக்கு ஸ்கோர் ஏறிக் கொண்டே வரும். இந்த விளையாட்டு உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது. ஆறிலிருந்து 60 வயது வரை அனைவருமே இந்த வேர்டில் விளையாட்டுக்கு அடிமையாகி வருகின்றனர்.

ஆனால் இந்த விளையாட்டு 80 வயது பாட்டியின் உயிரைக் காப்பாற்றியுள்ளது. அமெரிக்காவின் சிகாகோவில் வசித்து வருபவர் 80 வயதான டெனிஸ் ஹால்ட். இவரது மகள் ஹெரிடித் ஹால்ட் கால்ட்வெல் சியாட்டில் நகரில் வசித்து வருகிறார். இருவரும் வேர்டில் விளையாட்டை தொடர்ந்து விளையாடி வருபவர்கள். தினசரி, குறிப்பிட்ட ஒரு நேரத்தில் டெனிஸ் தனது மகளுக்கு தான் விளையாடி பெற்ற ஸ்கோரை அனுப்பி வைப்பார். அதேபோல ஹெரிடித்தும் தனது ஸ்கோரை அம்மாவுக்கு அனுப்பி வைப்பார். என்ன வேலை இருந்தாலும் தவறாமல் இந்த விளையாட்டு விளையாடி ஸ்கோரை அனுப்புவது இவர்களின் வழக்கமாகும்.

இந்த நிலையில் பிப்ரவரி 5ம் தேதி இரவு தனது வீட்டில் தனித்திருந்தார் டெனிஸ். அப்போது நிர்வாண நிலையில் ஒரு 30 வயது நபர் ஜன்னல் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தார். அந்த நபரின் பெயர் ஜேம்ஸ் டேவிஸ். ஜன்னல் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்ததால் அந்த நபரின் உடல் எல்லாம் குத்திக் கிழித்து ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. அவருக்கு சற்று மன நிலை சரியில்லை என்று பார்த்ததுமே தெரிந்தது.

அந்த நபர் டெனிஸை நெருங்கி தான் வைத்திருந்த கத்திரிக்கோலைக் காட்டி, சத்தம் போடக் கூடாது, கத்தக் கூடாது. நான் ஒன்றும் செய்ய மாட்டேன். என்னுடன் சேர்ந்து நீங்களும் குளிக்க வேண்டும். அதை மட்டும் செய்தால் போதும், நான் போய் விடுவேன் என்று கூறியுள்ளார்.

இது என்ன பைத்தியக்காரத்தனமான திருடனாக இருக்கிறானே என்று குழப்பமடைந்த டெனிஸ், என்ன செய்வது, எப்படித் தப்பிப்பது என்று தெரியாமல் விழித்தார். சரியாக இதே நேரத்தில்தான் தனது வேர்டில் ஸ்கோரை தனது மகளுக்கு அனுப்பி வைப்பார் டெனிஸ். ஆனால் அன்று இந்த நேரத்தில் ஸ்கோர் வராததால் குழப்பமடைந்தார் மகள். தாய்க்கு ஏதோ ஆகியிருக்கிறது என்று அவரது உள்ளுணர்வு கூறியது. காரணம், என்ன சூழல் இருந்தாலும் சரியான நேரத்தில் வேர்டில் ஸ்கோரை அனுப்புவது டெனிஸின் வழக்கமாகும்.

இதையடுத்து சிகாகோ காவல் துறையின் உதவி எண்ணை அழைத்து தனது தாய்க்கு ஏதோ நடந்திருப்பதாகவும், வீட்டுக்குச் சென்று பார்க்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார். இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்தனர். அப்போதுதான் டேவிஸின் பிடியில் டெனிஸ் சிக்கியிருக்கும் விவகாரம் தெரிய வந்தது. டேவிஸ் மன நலம் சரியில்லாமல் இருந்ததால் சிறிது நேர போராட்டத்திற்குப் பின்னர் அவரை போலீஸார் பிடித்துக் கைது செய்தனர். டெனிஸ் பத்திரமாக மீட்கப்பட்டார்.

டெனிஸுக்கு உடல் ரீதியாக எந்த காயமும் இல்லை. ஆனால் மனதளவில் அவர் மிகுந்த அதிர்ச்சியில் காணப்பட்டார். இந்த வயதில் இப்படி நடக்கும் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஆனால் நல்ல வேளையாக நான் பத்திரமாக மீண்டுள்ளேன் என்று கூறியுள்ளார் டெனிஸ்.

ஒரு வார்த்தை விளையாட்டு, ஒரு மூதாட்டியின் வாழ்க்கையைக் காப்பாற்றியுள்ளது அமெரிக்காவில் பேசு பொருளாக மாறியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.