“மீண்டும் அவரை தொடர்பு கொண்டபோது..!’’ – உக்ரைனில் கொல்லப்பட்ட நவீன்… நடந்ததை விவரிக்கும் நண்பர்

ரஷ்யா – உக்ரைன் போரில் கர்நாடக மாநில ஹாவேரி பகுதியைச் சேர்ந்த 21 வயதான நவீன் என்ற மாணவர் உயிரிழந்தார். அவர் உக்ரைனில் உள்ள மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வந்தார். இந்த நிலையில், அவரின் நண்பர் ஶ்ரீகாந்த் தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “கடந்த 5 நாள்களாக உக்ரைனில் உள்ள கார்கிவ் பகுதியில் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் அடித்தளத்தில் நானும், நவீன் இன்னும் சில நண்பர்கள் பதுங்கியிருந்தோம்.

கார்கிவிலிருந்து வெளியேறுவது உயிரைப் பணயம் வைப்பதற்குச் சமம் என்பதால் இந்த முடிவை மேற்கொண்டோம். நேற்று(நேற்று முந்தினம்) மாலை 3 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருந்தது.

உக்ரைன் போர்

இந்த நிலையில், நேற்று(நேற்று முந்தினம்) இரவே எங்களிடம் இருந்த உணவுப் பொருள்கள் தீர்ந்துவிட்டன. நான் காலை தூங்கி எழுந்த போது நவீன் இல்லை. அவனின் செல்போனில் தொடர்பு கொண்ட போது குடியிருப்புக்கு அருகில் 50 மீட்டர் தூரத்தில் இருக்கும் கடைக்குச் சென்றிருப்பதாகவும், கடையில் பொருள்கள் வாங்க பணம் அனுப்பிவிடக் கேட்டிருந்தான்.

நானும் சரி எனப் பணம் அனுப்பி விட்டு அவனுக்குத் தொடர்பு கொள்ள முயன்ற போது அவன் என் அழைப்பை எடுக்கவில்லை. அப்போது மிகப் பயங்கரமான குண்டு வெடிக்கும் சப்தமும், துப்பாக்கி சப்தமும் கேட்டுக்கொண்டே இருந்தது. நான் பதற்றத்துடன் அவன் வருகையை எதிர்பார்த்திருந்தேன். அவன் வரவே இல்லை என்பதால் 30 நிமிடங்களுக்கு பின் மீண்டும் அவனை செல்போனில் தொடர்பு கொண்டபோது யாரோ ஒரு உக்ரேனியர் பேசினார்.

உக்ரைன்

அவர் பேசுவது எனக்குப் புரியவில்லை அதனால் எனக்கு அருகில் இருக்கும் மற்றொரு உக்ரேனிய பெண்ணிடம் செல்போனை கொடுத்துப் பேசச் சொன்னேன். அவர் பேசும் போதே அழத் தொடங்கினார். நான் கேட்டபோது நவீன் இறந்துவிட்டான் எனக் கூறினார். நானும் நண்பர்களும் அந்த இடத்துக்குச் சென்று பார்த்த போது அங்குக் குண்டு வெடித்ததுக்கான அடையாளம் எதுவும் இல்லை.

அவனைத் துப்பாக்கியால் தான் சுட்டுக் கொன்றிருக்க வேண்டும். அவனது உடல் எங்கே என்றுக் கூட எங்களுக்குத் தெரியாது. இங்குக் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 120 மாணவர்கள் இருக்கிறோம், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 2000 பேர் வரை இருக்கிறோம். இங்கிருந்து அண்டை நாட்டுக்குச் செல்ல உக்ரைனியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

உக்ரைன்

அதிக குண்டுவெடிப்பு காரணமாக நாங்கள் வெளியே செல்ல பயப்படுகிறோம். வெளியே செல்லும் ஒவ்வொருவரும் தங்கள் உயிரைப் பணயம் வைத்துத் தான் செல்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.