தெர்மோபேரிக், க்ளஸ்டர் குண்டுகள்: உக்ரைன் போரில் அதிபயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்த ரஷ்யா திட்டம்

மாஸ்கோ: உக்ரைன் உடனான போரில் க்ளஸ்டர் குண்டுகள், தெர்மோபேரிக் ஆயுதங்கள் என தன்னிடம் உள்ள அதிநவீன மிக மோசமான நாககர விளைவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்களையும் பயன்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதல் 8வது நாளை எட்டியுள்ள நிலையில், எதிர் தரப்பிலிருந்து பின்வாங்கும் அறிகுறி தென்படாததால் இன்றைய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அடுத்தக்கட்டத் தாக்குதலுக்கு ரஷ்யா தயாராக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், க்ளஸ்டர் குண்டுகள், தெர்மோபேரிக் ஆயுதங்கள் என தன்னிடம் உள்ள அதிநவீன மிக மோசமான நாசகர விளைவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்களையும் பயன்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

அதன்படி, உக்ரைன் மீது தாக்குதல் நடத்த தெர்மோபேரிக் ராக்கெட் லாஞ்சர்களை ரஷ்யா தயார் நிலையில் வைத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தெர்மோபேரிக் ஆயுதங்கள் வளிமண்டலத்தை சூடாக்கி அங்குள்ள காற்றை கொதிநிலைக்குக் கொண்டு செல்லும். இதனால் தெர்மோபேரிக் ஆயுதத்தின் இலக்கின் கீழ் உள்ள அனைத்து எரிந்துவிடும். இந்த வகை ஆயுதம் துல்லியமாக நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் பேரழிவை ஏற்படுத்தக் கூடியது. இதன் தாக்கம் இலக்கைச் சுற்றி 5 முதல் 6 கி.மீ எல்லைக்குள் இருக்கும். அந்த எல்லைக்குள், பதுங்கு குழிகள், சுரங்கங்களில் இருப்போரைக் கூட இந்த குண்டு விட்டுவைக்காதாம்.

இது தவிர ரஷ்யப் படைகள் BM 30 Smerch, கனரக MRL லாஞ்சர்கள் (அதாவது தொலைதூரம் பாய்ந்து அதிக சேதத்தை ஏற்படுத்தும் ராக்கெட்டுகளை ஏவும் லாஞ்சர்கள்), தவிர கார்கிவ் நகரின் குடியிருப்புப் பகுதிகளில் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட க்ளஸ்டர் குண்டுகள் எனப்படும் கொத்து குண்டுகள் ஆகியனவற்றையும் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த வகை கொத்துக் குண்டுகள் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன.

போர் விமானத்திலிருந்து வீசப்படும் க்ளஸ்டர் குண்டுகள் இலக்கில் சிறுசிறு குண்டுகளாகப் பிரிந்து விழுந்து வெடித்துச் சிதறும். இது மிகுந்த நாசத்தை ஏற்படுத்தும். இதனால் உயிர்ப்பலி அதிகரிக்கும்.

ரஷ்யா உக்ரைன் நகரங்களில் மிக மோசமான தாக்குதலை நடத்தி வருகிறது. பொதுமக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படாது என்றுதான் ஆரம்பத்தில் ரஷ்யா கூறியது. ஆனால் இதுவரை 2000க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் தாக்குதலுக்கு முன்னதாக அதன் எல்லையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரஷ்யப் படைகளில் 80% தற்போது உக்ரைனுக்குள் இருக்கின்றன. ரஷ்யா மட்டும் அதன் முழு ராணுவ பலத்தை உக்ரைன் மீது பிரயோகப் படுத்தினால் உக்ரைனில் மிகவும் மோசமான விளைவுகள் ஏற்படும். பொதுமக்கள் பலி எண்ணிக்கை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உயரும்.

மீண்டும் 94 ஐ நிகழ்த்தும் ரஷ்யா: 1994ல் செச்சன்ய தலைநகர் க்ரோஸ்னியில் ரஷ்யா என்ன மாதிரியான தாக்குதல் வியூகத்தைப் பயன்படுத்தியதோ அதைத்தான் இப்போதும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. ரஷ்யாவின் தாக்குதலில் க்ராஸ்னி நகரம் முழுவதுமே முற்றிலுமாக பேரழிவை சந்தித்தது. தற்போது ரஷ்யா வகுத்திருக்கும் தாக்குதல் வியூகம் உக்ரைனில் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும் அதற்குள் பேச்சுவார்த்தையில் நல்ல தீர்வு எட்டப்பட வேண்டும் என்று சர்வதேச போர் வியூக நிபுனர்கள் கூறுகின்றனர். மேலும், ரஷ்யா பயன்படுத்தும் வியூகத்தை அமெரிக்கா ஈராக்கிலும், 90களில் யூகோஸ்லேவியா மீது அமெரிக்க, நேட்டோ படைகளும் பயன்படுத்தியுள்ளன என்று வரலாறு கூறுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.