தி ஹேக்,
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் நேற்று ஒரு வாரத்தை எட்டியுள்ளது. முதலில் ராணுவ கட்டமைப்புகளை குறியாகக் கொண்டுதான் தாக்குதல் நடத்தப்படும் என ரஷியாவால் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த போரில் இலக்கு வைக்கப்படுகிற தலைநகர் கீவ் தொடங்கி கிர்காவ் உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் அடுக்கு மாடி குடியிருப்புகள் மீது ஏவுகணை தாக்குதல்கள், குண்டுவீச்சுகள் சரமாரியாக நடந்து வருகின்றன.
இது மனித உரிமையை மீறிய செயலாக பார்க்கப்படுகிறது. இதேபோன்று தடை செய்யப்பட்டுள்ள வெற்றிட குண்டுகளையும் (Vacuum bomb) ரஷியா பயன்படுத்தி வருகிறது. இதுவரை நடந்துள்ள ரஷிய தாக்குதல்களில் இந்திய மருத்துவ மாணவர் நவீன் சேகர கவுடா உள்பட 2 ஆயிரம் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டிருப்பது உலகளவில் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச கோர்ட்டில் உக்ரைன் வழக்கு தொடுத்துள்ளது. சர்வதேச கோர்ட்டின் உறுப்பு நாடுகளும், ரஷியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துள்ளன. அதன்பேரில் சர்வதேச கோர்ட்டின் வக்கீல் கரீம்கான், ரஷியா மீதான விசாரணையை நேற்று முன்தினம் இரவு தொடங்கி உள்ளார்.
ரஷிய படையெடுப்பினால் அதிகரித்து வரும் அப்பாவி மக்கள் இறப்பு எண்ணிக்கை, சொத்துக்கள் அழிப்புக்கு மத்தியில் அரங்கேறி வருகிற போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலைக்கு பொறுப்பான மூத்த அதிகாரிகளை குறிவைத்து இந்த விசாரணை நடத்தப்படுகிறது.
இந்த விசாரணை பற்றி சர்வதேச கோர்ட்டின் வக்கீல் கரீம்கான் கூறுகையில், ‘‘உக்ரைனில் ஆதாரங்களை சேகரிப்பதற்கான பணிகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளன’’ என்று குறிப்பிட்டார். பல தரப்பினரும் ரஷியா மீதான சர்வதேச கிரிமினல் கோர்ட்டு விசாரணையை வரவேற்றுள்ளனர்.