’புல்டோசர் பாபா’ யோகிக்கு சமர்ப்பணம் – உ.பி.யில் புல்டோசரில் வலம் வந்து வெற்றி ’ஹோலி’ கொண்டாடிய பாஜகவினர்

புதுடெல்லி: உத்தரப் பிரதேச தேர்தலில் 270+ தொகுதிகளை வசப்படுத்தி மீண்டும் யோகி ஆதித்யநாத் ஆட்சி அமைக்கும் நிலையில், அங்கு பாஜகவினர் புல்டோசரில் ஏறி வெற்றி வலம் வந்தனர். தலைநகரான லக்னோவின் பாஜக தலைமையகத்தில் முன்கூட்டியே ’ஹோலி’ கொண்டாடப்பட்டது.

இன்று வெளியான ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முடிவுகளில் பாஜகவிற்கு நான்கு மாநில சட்டப்பேரவைகளில் வெற்றி கிடைத்துள்ளது. இதில் அதிகமாக உத்தரப் பிரதேசத்தின் வெற்றியே கொண்டாடப்படுகிறது. லக்னோவின் சாலைகளில் பாஜகவினர் புல்டோசர்களில் வலம் வந்தனர். இதன் பின்னணியில் உ.பி.-யின் குற்றப்பின்னணி கொண்ட அரசியல்வாதிகள் மீது முதல்வர் யோகி ஆதித்யநாத் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக இருந்தது என்று பாஜகவினர் கூறுகின்றனர்.

குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதிகளுக்கும் அவர்களது ஆதரவாளர்களுக்கும் பெயர் போனது உபி. இங்கு 2017 தேர்தலில் தனிமெஜாரிட்டியுடன் ஆட்சிக்கு வந்தது பாஜக. இதன் முதல்வராக அமர்ந்த துறவியான யோகி ஆதித்யநாத், உ.பி.-யின் குற்றப் பின்னணி உடைவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தார். அவர்களது ரூ.1848 கோடி மதிப்பிலான சொத்துக்களையும் அரசுடமையாக்கி இருந்தார். இத்துடன், அவர்களின் சட்டவிரோதக் கட்டிடங்களை புல்டோசர் ஓட்டி இடித்து தரைமட்டமாக்கினார். இதன் காரணமாக முதல்வர் யோகியை ’புல்டோசர் பாபா’ எனவும் உ.பி. வாசிகள் அழைக்கத் தொடங்கினர்.

இதன் பலனைப் பெற தனது தேர்தல் பிரச்சாரங்களில் புல்டோசர்களையும் கொண்டு வந்து நிறுத்தி இருந்தார் முதல்வர் யோகி ஆதித்யநாத். இதையடுத்து, உ.பி. வெற்றிக்கு பிறகு புல்டோசர்களை லக்னோ சாலைகளில் உருட்டி, பாஜகவினர் லட்டுக்களை விநியோகித்தனர். புல்டோசரில் பயணம் செய்த பாஜகவினர், ’ஜெய் ஸ்ரீராம்’, ‘பாரத் மாதா கீ ஜெய்’ எனக் கோஷங்களிட்டனர். அதேசமயம், இந்த மாதம் வரவிருக்கும் ஹோலி பண்டிகையை இன்றே கொண்டாடியும் மகிழ்ந்தனர்.

ஹோலியில் ஒருவர் மீது ஒருவர் பல்வேறு நிறங்களை வீசி மகிழ்கிறார்கள். இதை முன்கூட்டியே கொண்டாடும் விதத்தில் இன்று பாஜகவின் காவி நிறத்தூள்களை தங்களுக்குள் வீசியும், பூசியும் வெற்றிக் களிப்பை கொண்டாடினர்.

பாஜகவினர் கைகளில் அவர்களது கட்சிக் கொடிகளுடன், பட்டாசுகளையும் கொளுத்திக் கொண்டாடத் தவறவில்லை. இந்த கொண்டாட்டத்தில் ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

உ.பி.யில் சுமார் முப்பது வருடங்களுக்கு பின் ஒரே கட்சியின் ஆட்சி இரண்டாவது முறையாக அமைகிறது. இதில் முக்கிய எதிர்கட்சியான சமாஜ்வாதி கூடுதலாக 160 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. எனினும், இதர எதிர்கட்சிகளில் மாயாவதியின் பகுஜன் சமாஜுக்கு வெறும் ஒரு தொகுதியில் வெற்றி கிடைத்துள்ளது. காங்கிரஸுக்கும் இரண்டு தொகுதிகளில் முன்னிலை கிடைத்துள்ளது.

கடந்த 2017 சட்டப்பேரவை தேர்தலில் கிடைத்ததை விட பாஜகவிற்கு இந்த முறை ஐந்து சதவிகித வாக்குகள் கூடுதலாகக் கிடைத்துள்ளன. எனவே, இது அடுத்து 2024-இல் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலிலும் வெற்றி பெறுவதற்கான அடித்தளமாக பாஜகவினர் கருதுகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.