விவசாய நிலம் குத்தகைக்கு ஒப்பந்தம் செய்வது அவசியமா?

‘‘நண்பருக்கு என் விவசாய நிலத்தை ஐந்து ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு விட விரும்புகிறேன். ஒப்பந்தம் செய்து கொள்வது அவசியமா?’’

தி.லோகேஷ், அரக்கோணம்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர், என்.ரமேஷ் பதில் சொல்கிறார்.

‘‘அதிகம் அறிமுகம் இல்லாத நபர்களுக்கு மட்டுமல்ல, நீண்ட காலம் பழகிய நண்பர், உறவினர்களாக இருந்தாலும், சட்டப்படி யான குத்தகை ஒப்பந்தம் செய்து கொள்வது அவசியம். ‘தமிழ்நாடு பயிரிடும் குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டம் 1955 சட்டப்பிரிவு-4 பி (2)’-ன்படி நிலத்தைக் குத்தகைக்கு எடுக்கும்போது, சில விதிமுறை களைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் குத்தகைக்கு எடுக்கும் நிலத்தின் சர்வே எண், அளவு, குத்தகைக் காலம், குத்தகைத் தொகை, செலுத்தும் முறை, நிலத்தின் பயன்பாடு ஆகிய விவரங்களுடன், நில உரிமையாளருடன் குத்தகை ஒப்பந்தம் போட்டுக்கொள்ள வேண்டும். அதில் இரு தரப்பினரும் கையொப்பம் இட வேண்டும்.

விவசாயம்

மொத்தம் மூன்று ஒப்பந்தப் படிவங்கள் தயாரித்து, நீங்களும் நிலத்தின் உரிமையாளரும் தலா ஒரு படிவத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். மூன்றாவது படிவத்தை 15 நாள்களுக்குள் உங்கள் பகுதிக்குட்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் பதிவுக்காகச் சமர்ப்பிக்க வேண்டும்.

குத்தகை ஒப்பந்தம், ‘முத்திரைத்தாளில் தான் எழுதப்பட வேண்டும்’ என்கிற அவசியமில்லை. வெள்ளைத்தாளில் எழுதினாலே போதுமானது. குத்தகை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி இருவரும் நடந்துகொள்ள வேண்டும். இதில், யாரேனும் விதி முறைகளை மீறினால், அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடியும். அதற்குக் குத்தகை ஒப்பந்தம் அவசியம். மேலும், வாசகர்களுக்கு இது போன்ற விவசாய சட்டம் தொடர்பான கேள்விகள் இருந்தால், இங்கு குறிப்பிடப்பட்டுள்ள இமெயில் முகவரிக்கு கேள்விகளை அனுப்பவும். உரிய பதில் அளிக்கிறோம்.’’

தொடர்புக்கு, இ.மெயில்: [email protected]

ரமேஷ், கலியன்

தீவனப் பயிர்கள் சாகுபடி செய்து, விதைக்கரணைகளை விற்பனை செய்யவுள்ளேன். எந்தப் பயிர்களைச் சாகுபடி செய்யலாம். என்ன விலைக்கு விற்பனை செய்ய முடியும். இதைச் சொட்டுநீர்ப் பாசனத்தில் சாகுபடி செய்யலாமா?

எம்.சரவணன், கள்ளக்குறிச்சி.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தீவனப் பயிர் விவசாயி கலியன் பதில் சொல்கிறார்.

‘‘கடந்த பத்து ஆண்டு களாகத் தீவனப்பயிர்கள் சாகுபடி செய்கிறேன். விதைக் கரணைகளையும் விற்பனை செய்து வருகிறேன். சொட்டு நீர் மூலம்தான் பாசனம் செய்கிறேன். இந்தப் பாசன முறையில், தீவனத்தைச் சாகுபடி செய்யும் போது, ஒரு நுட்பத்தை, கட்டாயம் கடைப் பிடிக்க வேண்டும். நடவு செய்யும்போது மட்டுமே விதைக்கரணைக்கு அருகில், சொட்டுநீர் குழாய்கள் இருக்க வேண்டும். 40 நாள்கள் கழித்து, மண் அணைக்கும்போது, சொட்டு நீர்க்குழாய்களை 3 அடி தள்ளிப் போட வேண்டும். பயிர்களுக்கு அருகில் இருந்தால், குழாய்களில் வேர் சுற்றிக்கொண்டு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், தீவனம் அறுவடை செய்யும்போது, அரிவாள் பட்டும்கூட, சொட்டுநீர்க் குழாய் சேதமாகும். ஆரம்பத்தில் இந்த நுட்பம் தெரியாமல், தவறு செய்தேன். அடுத்த முறை திருத்திக் கொண்டேன். தீவனப் பயிர்களில் குட்டை நேப்பியர், சிவப்பு நேப்பியர், வேலிமசால்… போன்றவற்றைச் சாகுபடி செய்யலாம்.

தீவனப்புல் சாகுபடி

உதாரணத்துக்கு, ஒரு தீவன விதைக் கரணையை நடவு செய்தால், அதிலிருந்து சராசரியாக 10 கரணைகள் கிடைக்கும். குட்டை நேப்பியர் கரணை 1.50 ரூபாய், சிவப்பு நேப்பியர் 1.50 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யலாம். தீவனப்பயிர்கள் பல ஆண்டுகால பயிர். ஒவ்வொரு முறையும் அறுவடை செய்த பிறகு அந்த நிலத்தில் மீண்டும் தீவனம் வளரும். இப்படி வளரும் தீவனப்பயிர்களில் 4 முதல் 5 மாதங்களுக்குள் அறுவடை செய்யப்படும் விதைகரணைகள்தான் முளைப்புத் திறனுடன் இருக்கும். இந்தத் தீவனப் பயிர்களை ஒருமுறை சாகுபடி செய்தால் போதும், ஐந்து ஆண்டுகள் பலன் கொடுக்கும்.

ஒருவேளை, விற்பனை நோக்கில் அல்லாமல் கால்நடைகளுக்கு தீவனமாகப் பயன்படுத்துவதற்காகப் பயிரிடுகிறீர்கள் என்றால், முதல் முறை மட்டும் நடவு செய்ததை 60 நாள்களில் அறுவடை செய்ய வேண்டும். அதன் பிறகு, 45 நாள்களுக்கு ஒருமுறை அறுவடை செய்யலாம். இந்தக் கால அளவைக் கடந்து தீவனப்பயிர்களை அறுவடை செய்து மாடுகளுக்குக் கொடுத்தால், உடல் நலம் பாதிக்கும் என்று கால்நடை மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

தீவன கரணைகள்

தீவனப் பயிர்களுக்கு மாதம் ஒரு முறை 200 லிட்டர் அமுதக் கரைசலை சொட்டுநீர்ப் பாசனம் மூலமாகக் கொடுக்கலாம். இது மண் வளத்தை மேம்படுத்தி, நுண்ணுயிர்களைப் பெருக்கும். ஆண்டுக்கு ஒரு முறை ஏக்கருக்கு ஒரு டன் மட்கிய எரு கொடுக்கலாம். மற்றபடி, எந்தப் பராமரிப்பும் தேவையில்லை. பூச்சி-நோய் தாக்குதல் ஏற்படாது. வாரத்துக்கு இரண்டு முறை சொட்டு நீர்ப் பாசனம் செய்ய வேண்டும். இதைக் கடைப்பிடித்தாலே, நல்ல லாபம் பெறலாம். நான் ஆண்டுக்கு ஒரு ஏக்கரில் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் லாபம் எடுத்து வருகிறேன். தீவனப்புல் சாகுபடி செய்ய மட்டும் தெரிந்திருந்தால் போதாது. அதை விற்பனை செய்யும் நுட்பமும் அறிந்திருக்க வேண்டும். கே.வி.கே, வாட்ஸ் அப் குழுக்கள், சமூக ஊடகங்களில் தீவனப்புல் விற்பனை பற்றித் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான், விற்பனை வாய்ப்பு இருக்கும். இந்த முறையைத்தான் நானும் பின்பற்றி லாபம் பெற்று வருகிறேன்.’’

தொடர்புக்கு, கலியன், செல்போன்: 82487 86413.

புறா பாண்டி

‘‘பருப்பு வகைகள் மற்றும் வாழை, மரவள்ளி சிப்ஸ் தொழில் தொடங்கி விற்பனை விரும்புகிறேன். இதற்கான வழிகாட்டல் மட்டும் திட்ட அறிக்கை எங்கு கிடைக்கும்?’’

எஸ்.ஜெயந்திரமணி, கடத்தூர்,

தர்மபுரி மாவட்டம்.

‘‘சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தில் ‘தொழில் ஆலோசனை மையம்’ செயல்படுகிறது. இங்கு தொழில் தொடங்க ஆலோசனை கேட்டு வருபவர்களிடம், பல்வேறு வாய்ப்புகள் பற்றி வழிகாட்டு கிறார்கள். இந்த ஆலோசனைகளின்போது, தொழிலைத் தேர்ந்தெடுத்தல், தொழில்நுட்பத் தகவல், சந்தைப்படுத்தும் விதம், அரசின் நிதியுதவிகள், வல்லுநர் மூலம் தொடர் தொழில் வழிகாட்டுதல் போன்ற உதவிகளும் வழங்கப்படுகின்றன. பெரும்பாலும் திட்ட அறிக்கை முறையாகத் தயாரிப்பதில்தான் பலர் சிரமப்படுகிறார்கள். அதைச் சரியான முறையில் தயாரித்துவிட்டால், வங்கிகளில் எளிதாகக் கடன் பெறலாம். திட்ட அறிக்கையைச் செம்மைப்படுத்தி வங்கிகள் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு முழுமை அடையவும் ஆலோசனை தருகிறார்கள்.’’

தொடர்புக்கு,
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம்,
பார்த்தசாரதி கோயில் தெரு,
ஈக்காட்டுத்தாங்கல், சென்னை-600032
044 – 2225 2081 / 82 / 83 / 84.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.