லாகூர்,
பாகிஸ்தான் சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் ராவல்பிண்டி மற்றும் கராச்சியில் நடந்த முதல் இரு டெஸ்ட் போட்டிகள் ‘டிரா’வில் முடிந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட போட்டி லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் கடந்த மார்ச் 21ம் தேதி தொடங்கியது
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்க்சில் 10 விக்கெட்டுக்களை இழந்து 391 ரன்கள் குவித்தது .
இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சில் விளையாடிய பாகிஸ்தான் அணி 268 ரன்களுக்கு 10 விக்கெட்டுக்களை இழந்து ஆட்டமிழந்தது. இதையடுத்து 123 ரன்கள் முன்னிலையில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 60 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
அதன் படி பாகிஸ்தானுக்கு 351 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது. இதனை தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 73 ரன்கள் எடுத்துள்ளது .கடைசி நாள் ஆட்டம் நாளை நடக்கிறது பாகிஸ்தான் வெற்றி பெற இன்னும் 278 ரன்கள் தேவைப்படுகிறது