`இந்த ரேஷன் கடையை எப்பதான் திறப்பாங்க?' – 12 ஆண்டுகளாக காத்துக் கிடக்கும் கிராம மக்கள்

பொதுமக்களின் மிகவும் அத்தியாவசிய தேவைகளில் முதன்மை இடம் வகிக்கிறது ரேஷன் கடை. குறிப்பாக கிராமப்புற ஏழை எளிய மக்கள் தங்களது அன்றாட உணவு தேவைகளுக்கு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருள்களைதான் முழுமையாக நம்பியிருக்கிறார்கள். இந்நிலையில்தான் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ரேஷன் கடை, இதுவரையில் திறக்கப்படாததால், இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகிறார்கள்.

திருவாரூர் அருகே திருநெய்ப்பேர் ஊராட்சியில் அமைந்துள்ளது, கடுவங்குடி கிராமம். இங்கு ரேஷன் கடை இல்லாததால் இப்பகுதி மக்கள் நீண்ட தூரம் நடந்து சென்று, திருநெய்ப்பேர் பகுதியில் உள்ள ரேசன் கடையில் அரிசி, சர்க்கரை, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருள்களை வாங்கும் நிலை இருந்தது. இதனால் பலவிதமான சிரமங்களை சந்திக்க நேர்ந்ததால், தங்களது ஊரில் ரேஷன் கடை திறக்க வேண்டும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். அதன் பலனாக, 12 ஆண்டுகளுக்கு முன்பு, இங்கு ரேஷன் கடை திறப்பதற்காக, புதிய கட்டடம் கட்டப்பட்டது.

ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும் , உணவுத் துறை அதிகாரிகளின் அலட்சியத்தாலும் இதுவரையிலும் இந்த ரேஷன் கடை திறக்கப்படாமலே உள்ளது என்கிறார்கள் அப்பகுதி மக்கள். இதுகுறித்து பேசும் கடுமங்குடி கிராமவாசிகள், ‘’எங்க ஊருக்குனு ஒரு ரேஷன் திறக்கப்படணும்னுங்கறது இந்த பகுதி மக்களோட நீண்டகால கோரிக்கை. இந்த நிலையில் தான் நாகப்பட்டினம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த திமுக-வின் ஏ.கே.எஸ். விஜயன், எங்களது கோரிக்கையை நிறைவேற்ற, 2010-ம் ஆண்டு, தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் திட்டமதிப்பிட்டில், ரேஷன் கடைக்கான கட்டடம் கட்டிக் கொடுத்தார். இதுல ரேஷன் கடை திறப்படும் சமயத்துல தமிழ்நாட்டுல ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அதிமுக ஆட்சிக்கு வந்துடுச்சி.

திமுக எம்.பி நிதியில் கட்டப்பட்டதாலயோ என்னவோ, உணவுத் துறை அதிகாரிகள், இங்க ரேஷன் கடையை செயல்படுத்த எந்த நடவடிக்கையுமே எடுக்கலை. இப்ப திறப்பாங்க…. அடுத்த மாசம் திறப்பாங்கனு இப்படி 12 வருசம் ஓடிடுச்சி. புழக்கம் இல்லாமல், இந்த கட்டடம் பயனற்ற நிலையில் கிடந்ததால், பழுதடைஞ்சிக்கிட்டே இருக்கு. இந்த ஊர் மக்கள், நீண்ட தூரம் நடந்து போயி, திருநெய்ப்பேர்ல உள்ள ரேஷன் கடையில பொருள்கள் வாங்குறதுங்கற அத்தனை எளிதான விஷயமில்ல.

அங்க ஏற்கனவே கூட்டம் அதிகம். நாங்களும் அங்க போறதுனால, கூட்டம் நிரம்பி வழியும். எங்க ஊர் மக்கள்ல பெரும்பாலானவங்க, கூலித் தொழிலாளர்கள். ரேஷன் பொருள்கள் வாங்கப் போனால், அன்னைக்கு முழுக்க, பொழப்பு அதுலயே போயிடும். அதுவும் திபாவளி, பொங்கல் சமயங்கள்ல ரொம்ப சிரமப்படணும். திமுக ஆட்சிக்கு வந்துடுச்சினா, உடனடியா இந்த ரேஷன் கடையை திறந்துடுவாங்கனு நாங்களும் ரொம்ப நம்பிக்கையா இருந்தோம். கிட்டத்தட்ட ஒரு வருசம் நெருங்கப் போகுது. ஆனால் எங்க ஊர் மக்களோட எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படாமலே இருக்கு. மக்களின் நலன் கருதி உடனடியாக இதை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கணும்’’என வலியுறுத்தினார்கள். அரசு நடவடிக்கை எடுக்குமா?

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.