தமிழகம் முழுவதும் 3,482 அரசு பள்ளிகளில் 4808 கட்டிடங்கள் இடிப்பு

சென்னை:

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் 6,218 அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இவற்றில் 27 லட்சத்து 24 ஆயிரத்து 206 மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும் தொடக்க கல்வித் துறையின் கீழ் 31 ஆயிரத்து 336 அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் 25 லட்சத்து 50 ஆயிரத்து 997 மாணவர்கள் படிக்கிறார்கள்.

இந்த அரசுப் பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்களை இடிக்கும் பணிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றன. பருவமழையின் போது பழுதடைந்த கட்டிடங்களின் விவரங்களை பள்ளிக் கல்வித்துறை சேகரித்து அந்த கட்டிடங்களை இடிப்பதற்கு பொதுப் பணித்துறை, உள்ளாட்சித் துறையிடம் பட்டியலை அளிக்கும்.

திருநெல்வேலியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளி கழிப்பறைகள் சுவர் இடிந்து விழுப்புரத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பிறகு தமிழகம் முழுவதும் பழுதடைந்த பள்ளிக் கட்டிடங்கள் கணக்கெடுக்கப்பட்டு அவற்றை இடிக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இதுவரை 3 ஆயிரத்து 482 பள்ளிகளில் 4 ஆயிரத்து 808 பழுதடைந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 6 ஆயிரத்து 33 பள்ளிகளில் பழுதடைந்துள்ள 8 ஆயிரத்து 228 கட்டிடங்கள் இடிக்கப்படாமல் உள்ளன. ஒட்டுமொத்தமாக 9 ஆயிரத்து 573 பள்ளிகளில் 13 ஆயிரத்து 36 பழுதடைந்த கட்டிடங்கள் இருப்பதாக கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது.

இடிக்கப்படாத பள்ளிக் கட்டிடங்களில் மாணவர்கள் அச்சத்துடன் கல்வி கற்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் அந்த கட்டிடங்களை இடிப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்… இந்து சமய அறநிலையத்துறைக்கு 69 புதிய வாகனங்கள்- மு.க.ஸ்டாலின் வழங்கினார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.