நீதிபதியின் வயது வரம்பு 65 என்பது மிகக் குறைவு: சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி கருத்து

புதுடெல்லி: நீதிபதிகளை நீதிபதிகள்தான் நியமிக்கிறார்கள் என்ற எண்ணம் தவறானது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கருத்து தெரிவித்துள்ளார். இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கடந்த ஒரு வருட காலமாக பணியாற்றி வரும் நீதிபதி என்.வி.ரமணா, வருகிற ஆகஸ்ட் மாதம் 26ம் தேதியுடன் ஓய்வு பெறவிருக்கிறார். இந்நிலையில் ‘உலகின் மிகப் பெரிய மற்றும் பழமையான ஜனநாயக நாடுகளின் உச்ச  நீதிமன்றங்களின் ஒப்பீட்டு அணுகுமுறைகள்’ குறித்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி ஸ்டீபன் பிரேயருடன் காணொலியில் உரையாடினார். அப்போது அவர் கூறுகையில், ‘இந்தியாவில் நீதிபதிகளை நீதிபதிகள்தான் நியமிக்கிறார்கள் என்ற கருத்து உள்ளது; ஆனால் அந்த எண்ணம் தவறானது. நீதிபதிகள் நியமனம் நீண்ட ஆலோசனை மற்றும் செயல்முறை மூலமே தேர்வு செய்யப்படுகிறது. இதற்காக பலவேறு குழுக்களுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. உயர்நீதிமன்ற நீதிபதியாக ஒருவரின் பெயர் முன்மொழியப்பட்டவுடன், அவரது பின்னணி குறித்த விபரங்கள் மாநில அரசு, உயர்நீதிமன்றம் மற்றும் சம்பந்தப்பட்ட மாநில ஆளுநர் ஆகியோர் மூலம் கருத்துகள் கேட்கப்படும். அதன்பின் கோப்புகள் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும். அனைத்து தரப்பு அறிக்கைகளையும் ஏற்று உச்ச நீதிமன்றத்தின் முதல் மூன்று நீதிபதிகள் முன்மொழிவை ஆராய்வார்கள். பலருக்கு இது தெரியாமல் இருக்கலாம். எனவே பலதரப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையிலேயே கொலீஜியம் முறையில் நீதிபதிகள் நியமிக்கப்படுகிறார்கள். இதைவிட சிறப்பாக மற்றும் ஜனநாயக ரீதியிலான தேர்வு செயல்முறை இருக்க வாய்ப்பில்லை. உச்ச நீதிமன்ற நீதிபதி ஓய்வு பெறுவதற்கு வயது வரம்பு 65 என்று இருப்பது மிகக் குறைவான வயதாக கருதுகிறேன். நான் ஓய்வுபெற்ற பின் என்ன செய்யலாம் என்பது குறித்து தீவிரமாக யோசிக்கிறேன். அமெரிக்காவில் நீதிபதியாக இருப்பவர்கள் அந்நாட்டு அரசியல் சாசனப்படி உயிரோடு இருக்கும் வரை பதவியில் இருக்கலாம்’ என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.