ஈபிஎஸ் என் காரை எடுத்துச் செல்லலாம்; ஆனால்… உதயநிதி பேச்சால் அவையில் சிரிப்பலை

Udhayanidhi Stalin says EPS can take my car at any time but don’t go to BJP office: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எப்போது வேண்டுமானாலும் என் காரை எடுத்துச் செல்லலாம், ஆனால் கமலாலயம் மட்டும் போக வேண்டாம் என உதயநிதி ஸ்டாலின் கூறியது சட்டப்பேரவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

சில நாட்களுக்கு முன் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, சட்டப்பேரவை முடிந்த வெளியே வந்தபோது, செய்தியாளர்கள் அதிமுகவில் சசிகலாவை நீக்கியது செல்லும் என்ற தீர்ப்புக் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்க மறுத்தவாறே வேகமாகச் சென்ற ஈபிஎஸ், உதயநிதி ஸ்டாலினின் காரில் ஏற முயன்றார். உடனே அருகில் உள்ள காவலர் வந்து உங்களது கார் அங்கே இருக்கிறது என கூறினார். உடனே சாரி சொல்லிவிட்டு தனது காரில் கிளம்பினார்.

இதேபோல் கடந்த 3 நாட்களுக்கு முன் எடப்பாடி பழனிச்சாமியின் காரில் உதயநிதி ஏற முயன்றார். பின்னர் காரில் இருந்த ஜெயலலிதாவின் புகைப்படத்தை பார்த்து உதயநிதி சுதாரித்துக் கொண்டார். இவ்வாறு உதயநிதியும் எடப்பாடி பழனிச்சாமியும், மாறி மாறி கார் ஏற முயன்றதற்கு காரணம், இருவரது காரின் நிறமும், நிறுவனமும் ஒன்றுதான்.

இதையும் படியுங்கள்: ‘வன்னியர் சமூகத்தை எதிர்ப்பது நல்லதல்ல’ அண்ணாமலைக்கு எதிராக காடுவெட்டி குரு மகள் அறிக்கை

இந்தநிலையில், இந்தச் சம்பவங்கள் குறித்து உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசியது, அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

சட்டபேரவையில் இன்று சமூக நலத்துறை மீதான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பேசிய சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ, உதயநிதி ஸ்டாலின், எனக்கு இன்று பேச வாய்ப்பளித்த சபாநாயகருக்கு நன்றி. இந்தியாவிலேயே நம்பர் 1 முதலமைச்சராக திராவிட மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும், முதலமைச்சர், அமைச்சர் துரைமுருகன், மற்றும் கொறடாவுக்கு நன்றி. மிக முக்கியமாக எதிர்கட்சித் தலைவர் மற்றும் எதிர்கட்சித் துணைத் தலைவருக்கு தனிப்பட்ட முறையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏனென்றால் கடந்த ஆண்டு நான் பேசும் போது எதிர்க்கட்சி தலைவர் வெளிநடப்பு செய்து விட்டீர்கள். நேற்றும் வெளியே சென்று வீட்டீர்கள். இன்று நான் பேசும் போது உள்ளே இருக்கிறீர்கள் அதற்கு நன்றி எனக் கூறினார். மேலும், வெளிநடப்பு செய்தாலும் என் காரில் தான் ஏற செல்கிறீர்கள். நீங்கள் மட்டும் இல்லை நானும் 3 நாட்கள் முன்பு உங்க காரில் ஏற சென்றேன் என்றும் கூறினார்.

பின்னர், அடுத்த முறை எதிர்க்கட்சி தலைவர் தாரளமாக என் காரை எப்போது வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம். ஆனால் அந்தக் காரை எடுத்துக் கொண்டு தயவு செய்து கமலாலயத்திற்கு மட்டும் சென்று விடாதீர்கள் என்று கூறினார். உதயநிதி இவ்வாறு கூறியதும் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

இதற்கு பதிலளித்துப் பேசிய எதிர்கட்சித் துணை தலைவர் ஓபிஎஸ், எங்கள் கார் எப்போதும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகைக்கு தான் செல்லும் என தெரிவித்தார்.

பின்னர் பேசிய உதயநிதி, நான் அரசியலையும், அரசையும் அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பைப் பெற்றவன் என்று கூறினார். மேலும் அரசு செய்த மக்கள் நலத்திட்டங்கள் குறித்து உதயநிதி எடுத்துரைத்தார். குறிப்பாக திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு செய்த நலத்திட்டங்கள் குறித்து கூறினார்.

அடுத்ததாக பேசிய முதல்வர் ஸ்டாலின், உதயநிதி கூறிய மாற்றுத்திறனாளிகள் துறை மீது மிகுந்த கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இன்றைய உதயநிதியின் பேச்சு செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் அவரது முதல் பேச்சாக அமைந்துள்ளது. அவரது பேச்சினை அவரது தாயார் துர்கா ஸ்டாலின் மற்றும் மனைவி கிருத்திகா உதயநிதி நேரில் பார்த்து ரசித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.