டெல்லி : உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த இந்திய மாணவர்கள் அதன் அண்டை நாடுகளில் படிப்பை தொடர நடவடிக்கை எடுத்து வருவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. உக்ரைனில் போர் தீவிரம் அடைந்ததால் அந்த நாட்டில் மருத்துவம் படித்து வந்த 10,000த்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டனர். அவர்களில் 1900க்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். 3 மாதத்திற்கு மேலாக போர் நடந்து வருவதால் தங்களது படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தாயகம் திரும்பிய இந்திய மாணவர்கள் வேதனை தெரிவித்தனர். கடன் வாங்கி மருத்துவம் படிக்கச் சென்ற தமிழக மாணவர்களின் எதிர்க்காலமும் கேள்விக்குறியானது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், உக்ரைனில் படித்து போரால் தாயகம் திரும்பிய இந்திய மாணவர்கள் மீண்டும் படிப்பை தொடர உக்ரைனின் அண்டை நாட்டு பல்கலைக்கழகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இது தொடர்பாக வெளியுறவுத் துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். உக்ரைனில் போர் தற்போது முடிவுக்கு வராத சூழல் நிலவுகிறது. இதனால் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மருத்துவம் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு மாநில முதல்வர்களும் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தினர். இதன் அடிப்படையில் தமிழக மாணவர்கள் இந்தியாவிலேயே மருத்துவம் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இதே கோரிக்கையை இந்திய மருத்துவ சங்கமும் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.