5 மாதங்களுக்கு முன்னதாக சாதித்த இந்தியா: பிரதமர் மோடி பெருமிதம்!

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துதல், எரிபொருளின் மீதான இறக்குமதி சார்ந்திருப்பதைக் குறைத்தல், அன்னியச் செலாவணியைச் சேமிப்பது, சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தீர்ப்பது மற்றும் உள்நாட்டு விவசாயத் துறைக்கு ஊக்கமளிக்கும் நோக்கத்துடன், இந்திய அரசு, எத்தனால் கலந்த பெட்ரோல் (EBP) திட்டத்தை ஊக்குவித்து வருகிறது.

2018 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ‘உயிரி எரிபொருள் மீதான தேசியக் கொள்கை’ 2030 ஆம் ஆண்டிற்குள் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பதை குறிக்கும் இலக்காகக் கருதப்படுகிறது. இருப்பினும், ஊக்கமளிக்கும் செயல்திறனைக் கருத்தில் கொண்டு, 2014 முதல் அரசாங்கம் மேற்கொண்ட பல்வேறு தலையீடுகளால், 20 % எத்தனால் கலவை இலக்கு 2030, முன்கூட்டியே 2025-26 –க்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2020-25 ஆம் ஆண்டில் இந்தியாவில் எத்தனால் கலப்படத்திற்கான வழிமுறை ஜூன் 2021 இல் பிரதமரால் வெளியிடப்பட்டது, இது 20% எத்தனால் கலவையை அடைவதற்கான விரிவான பாதையை வழங்குகிறது. நவம்பர் 2022க்குள் 10% கலவையை அடைய வேண்டிய இடைநிலை மைல்கல்லையும் இது குறிப்பிடுகிறது.

இருப்பினும், பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் காரணமாக, திட்டத்தின் கீழ் 10% கலப்பு இலக்கானது 2022 நவம்பர் இலக்கு என்னும் காலக்கெடுவை விட மிகவும் முன்னதாகவே எட்டப்பட்டுள்ளது, இதில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சராசரியாக 10% ஐ எட்டியுள்ளன.

கடந்த 8 ஆண்டுகளில் இந்த சாதனை இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை அதிகப்படுத்தியது மட்டுமின்றி, ரூ.41,500 கோடிக்கு மேல் அந்நிய செலாவணி சேமிப்பை ஏற்படுத்தியது, உமிழ்வை 27 லட்சம் மெட்ரிக் டன் குறைத்து, ரூ.40,600 கோடிக்கு மேல் விவசாயிகளுக்கு விரைவாக செலுத்த வழிவகுத்தது. அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட அனைத்து முன்முயற்சிகளுடன், எத்தனால் கலப்பு திட்டம் 2025-26 க்குள் 20% கலப்பு இலக்கை அடையும் பாதையில் உள்ளது.

முன்னதாக, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, விஞ்ஞான பவனில் நடைபெற்ற “மண் காப்போம் இயக்கம்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, “இந்தியா திட்டமிட்டதை விட 5 மாதங்களுக்கு முன்னதாக, 10 சதவீத எத்தனால் கலப்பு இலக்கை எட்டியுள்ளதாக தெரிவித்தார்.” சாதனையின் மகத்துவத்தைப் பற்றி விவரித்த பிரதமர், 2014ல் எத்தனால் கலப்பு 1.5 சதவீதமாக இருந்தது என்று குறிப்பிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.