சர்க்கரை ஆலையில் சிறுவன் சாவு உறவினர்கள் சாலை மறியல்| Dinamalar

இந்திய நிகழ்வுகள்

பள்ளத்தில் கார் கவிழ்ந்து8 பேர் பலி; இருவர் காயம்

பூர்னியா-பீஹாரில் சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து, எட்டு பேர் உயிரிழந்தனர்; காயம் அடைந்த இருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பீஹாரின் பூர்னியா மாவட்டத்தில் நேற்று முன் தினம் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு, கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் இருந்து 10 பேர் காரில் வந்திருந்தனர்.நிகழ்ச்சி முடிந்து அன்று நள்ளிரவே சொந்த ஊருக்கு புறப்பட்டனர். நேற்று அதிகாலை 3:00 மணிக்கு பூர்னியா- – கிஷன்கஞ்ச் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் தண்ணீர் நிறைந்திருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்த நிலையில் இருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.விபத்தில் பலியானோருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.

ஹிஸ்புல் பயங்கரவாதிகாஷ்மீரில் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்-ஜம்மு – காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி ஒருவர், பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.ஜம்மு – காஷ்மீரின், குல்கம் மாவட்டத்தின் கண்டிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு நேற்று அதிகாலை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அவர்கள் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினர் கொடுத்த பதிலடியில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். அவர், ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

இதற்கிடையே, பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள பாரமுல்லா – ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில், நேற்று காலை சந்தேகத்துக்குரிய வகையில் ஒரு ‘பார்சல்’ கிடந்தது. போக்குவரத்து நிறுத்தப்பட்டு, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள்வரவழைக்கப்பட்டனர்.சோதனையில் பார்சலில் இருந்தது சக்தி வாய்ந்த வெடிகுண்டு என்பது தெரிந்தது. இதையடுத்து, அந்த குண்டு செயலிழக்க வைக்கப்பட்டது.

டில்லி மருத்துவமனையில் தீ: தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நோயாளி பலி

புதுடில்லி-டில்லி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஆக்சிஜன் தடை ஏற்பட்டு, ஐ.சி.யு., எனப்படும் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளி உயிரிழந்தார்.

டில்லியில் உள்ள பிரம்மசக்தி மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் தீவிர சிகிச்சை பிரிவு அமைந்துள்ளது.இங்கு நேற்று அதிகாலை 5:00 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து ஒன்பது வண்டிகளில் வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். இதற்கிடையே மருத்துவமனை ஊழியர்கள், நோயாளிகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர். ஆனால், தீ விபத்தால் ஆக்சிஜன் தடை ஏற்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளி ஒருவர் உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையே, ராஜஸ்தானில் மொஹூவா என்ற இடத்தில் உள்ள தட்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று முன்தினம் அதிகாலை 3:00 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்க போராடுகின்றனர்.இந்த தொழிற்சாலைக்கு 100 மீட்டர் துாரத்தில் கச்சா எண்ணெய் குழாய் செல்கிறது. அதில் இருந்து கச்சா எண்ணெய் திருடி இங்கு பதுக்கி வைத்திருந்தனர்.கச்சா எண்ணெய் தீப்பற்றி எரிவதால் தீயை எளிதில் அணைக்க முடியவில்லை என போலீசார் கூறினர். விபத்தில் சிக்கி யாரேனும் உயிரிழந்தனரா என்ற தகவல் வெளியாகவில்லை.

பா.ஜ., பிரமுகர் குறித்து அவதுாறு; ஜம்மு – காஷ்மீர் ‘யுடியூபர்’ கைது

புதுடில்லி-பா.ஜ.,வில் இருந்து, ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ள நுாபுர் சர்மா குறித்து அவதுாறாக சமூக வலை தளத்தில், ‘வீடியோ’ வெளியிட்ட, ஜம்மு – காஷ்மீரைச் சேர்ந்த, ‘யுடியூபர்’ கைது செய்யப்பட்டு உள்ளார்.

சர்ச்சை
முஸ்லிம் மதம் குறித்து அவதுாறாக கருத்து தெரிவித்த பா.ஜ., செய்தித் தொடர்பாளர் நுாபுர் சர்மா, கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் கூறிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. சில இடங்களில் வன்முறையும் வெடித்துள்ளது.இந்நிலையில், ஜம்மு – காஷ்மீரைச் சேர்ந்த பைசல் வானி என்ற இளைஞர், தன் யுடியூப் சேனலில், சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், நுாபுர் சர்மாவின் புகைப்படத்தில் நீண்ட வாளால், அவரது கழுத்தை துண்டிப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.இது சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இந்நிலையில், அந்த வீடியோவை நீக்கியுள்ள பைசல் வானி, தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்தும், மன்னிப்பு கேட்டும் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

‘வீடியோ’
மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும், வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் வீடியோ வெளியிட்டதாக, பைசல் வானி மீது, ஜம்மு – காஷ்மீர் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்துள்ளனர்

தமிழக நிகழ்வுகள்.

குட்கா மொத்த விற்பனையாளர் கைது


கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே விற்பனைக்காக பைக்கில் எடுத்துச்சென்ற குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் பாரதி, போலீசார் சின்னக்கண்ணு, பாஸ்கர் ஆகியோர் நேற்று காலை ஏமப்பேர் புறவழிச்சாலையில் உள்ள மேம்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அந்த வழியாக டி.வி.எஸ்., மொபட்டில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்ததில், 25.200 கிலோ குட்காவை விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது. விசாரணையில், கள்ளக்குறிச்சி அக்ரஹார தெருவைச் சேர்ந்த தர்மலிங்கம் மகன் சரவணன், 38; என தெரிந்தது. உடன் அவரை கைது செய்து, மொபட்டையும் பறிமுதல் செய்தனர்.

சர்க்கரை ஆலையில் சிறுவன் சாவு; உறவினர்கள் சாலை மறியல்


கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கான்ட்ராக்ட் பணியில் ஈடுபட்ட சிறுவன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த மிராளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் மகன் ஜெயசூர்யா, 17; பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார். இவர், விடுமுறையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையத்தில் உள்ள கள்ளக்குறிச்சி-2 கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வெல்டர் உதவியாளராக கான்ட்ராக்ட்டில் கடந்த 6ம் தேதி பணியில் சேர்ந்தார்.ஆலை வளாகத்திலேயே ஒரு அறையில் தங்கியிருந்த அவர், கடந்த 10ம் தேதி காலையில் உடலில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.

கச்சிராயபாளையம் போலீசார், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று, ஜெயசூர்யாவின் சாவில் சந்தேகம் உள்ளது. இறப்புக்கான காரணத்தை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்க மாட்டோம் எனக்கூறி உறவினர்கள் காலை 10:05 மணியளவில் அரசு மருத்துவமனை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி 10:10 மணியளவில் மறியலை கைவிடச் செய்தனர்.

இருப்பினும், அனைவரும் மருத்துவமனையை முற்றுகையிட்டு, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.டி.எஸ்.பி., ராஜலட்சுமி, இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து 12:30 மணியளவில் கலைந்து சென்றனர்.அதனைத் தொடர்ந்து நேற்று மாலை 5:00 மணிக்குப்பின் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தீ விபத்தில் லாரி எரிந்து நாசம்


ஓசூர்,-ஓசூர் அலசநத்தம் சிவா நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ், 42. இவர், அலசநத்தம் செந்தமிழ் நகரில், சுப்பிரமணி என்பவரது இடத்தில், பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் குடோன் வைத்திருந்தார். நேற்று மதியம் லாரியில் பழைய பிளாஸ்டிக் பொருட்களை ஏற்றி வந்து, குடோனில் நிறுத்தி வைத்திருந்தார். அப்போது, லாரியில் எலக்ட்ரிக் ஒயர் தீப்பிடித்து, லாரி மற்றும் அங்கிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிய துவங்கின. தகவலின்படி வந்த ஓசூர் தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். அதற்குள், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள லாரி மற்றும் பொருட்கள் எரிந்து நாசமாகின. ஓசூர் ஹட்கோ போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

பணத்திற்காக சித்தி மகன் கொலை: அண்ணன் கைது

வடமதுரை : திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே பணத்துக்காக சித்தி மகன் மாரிமுத்து 36, வை கொலை செய்த முனியாண்டியை 43, போலீசார் கைது செய்தனர்.பழநி அருகே பெரும்பாறையை சேர்ந்தவர் மாரிமுத்து 36.நேற்று காலை வடமதுரை சித்துார் மந்தை குளத்தில் காயங்களுடன் இறந்து கிடந்தார். மாரிமுத்துவின் பெரியம்மா மகனான செங்குளத்துபட்டி முனியாண்டி கொலை செய்தது தெரிந்தது. திண்டுக்கல் அழகர்நாயக்கன்பட்டியில் பதுங்கியிருந்த முனியாண்டியை வடமதுரை போலீசார் கைது செய்தனர்

விசாரணையில், பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய மாரிமுத்து ,ரூ ரூ.37 ஆயிரத்துடன் செங்குளத்துபட்டியில் உள்ள தாய்மாமன் செல்லத்துரை வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு மது அருந்திய போது இவ்வளவு பணம் எப்படி வந்தது என முனியாண்டி கேட்டதோடு, தனக்கும் சிறிது பணம் தர கேட்டுள்ளார். மறுத்த மாரிமுத்துவை, நேற்று முன்தினம் இரவு மது குடிக்கலாம் என கூறி மந்தை குளத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு கொலை செய்ததோடு பணத்தையும் திருடி சென்றது தெரிந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.