காந்திநகர்: தனது அன்னையின் 100வது பிறந்தநாளை ஒட்டி அவரை நேரில் சந்தித்து அவருக்கு பாத பூஜை செய்து, மாலை அணிவித்து ஆசிர்வாதம் பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி.
பிரதமர் நரேந்திர மோடியின் தாய் ஹீராபென் மோடி இன்று தனது 100வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். 1923 ஜூன் 18ல் அவர் பிறந்தார். அவரது பிறந்தநாளை ஒட்டி குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள தனது வீட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி, தாய்க்கு மாலை அணிவித்து காலைத் தொட்டு வணங்கி ஆசிர்வாதம் பெற்றார். முன்னதாக தாயுடன் பூஜை செய்துவிட்டு. பின்னர் அவர் பாதங்களைக் கழுவி பாதை பூஜை செய்து, அந்தத் தண்ணீரை தன் கண்களில் தடவிக் கொண்டார். பின்னர், அவருக்கு மாலையும், ஷால்வையும் அணிவித்தார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். கூடவே அவர், என் தாய் வீட்டுச் செலவை சமாளிக்க நிறைய வீடுகளில் பாத்திரம் தேய்த்தார். ராட்டை சுற்றுவார். பருத்தி பரிப்பார். நூல் நூற்பது தொடங்கி வீட்டு வேலை வரை எங்களைக் காப்பாற்ற எல்லா வேலைகளையும் செய்தார். வலி மிகுந்த வேலைகளுக்கு இடையேயும் கூட பருத்தி முள் எங்களைக் குத்திவிடக் கூடாது என வீட்டை சுத்தம் செய்வார். ஒருவேளை என் தந்தை உயிரோடு இருந்திருந்தால் அவரும் இந்த ஆண்டு நூற்றாண்டு பிறந்தநாளை எட்டியிருப்பார் என்று பதிவிட்டிருக்கிறார்.
#WATCH | Gujarat: Prime Minister Narendra Modi met his mother Heeraben Modi at her residence in Gandhinagar on her birthday today.
Heeraben Modi is entering the 100th year of her life today. pic.twitter.com/7xoIsKImNN
— ANI (@ANI) June 18, 2022
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் பிறந்தநாளை ஒட்டி புரி ஜகநாதர் கோயிலில் சமபந்தி போஜனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் சொந்த ஊரான வத்நகரில் பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தாயாரை சந்தித்த பின்னர் பிரதமர் மோடி பஞ்சமால் மாவட்டத்தில் உள்ள புனித தலமான பாவகத்திற்குச் செல்கிறார். பின்னர் குஜராத் கவுரவ் அபியான் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். வதோதராவில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், ரூ.16,369 கோடி மதிப்பிலான 18 ரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். தேசிய ரயில் போக்குவரத்து மையத்திற்கு புதிய கட்டிடம் அமைக்க அடிக்கல் நாட்டுகிறார். இந்தக் கட்டிடம் ரூ.5,620 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படுகிறது.