ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு, சுமார் 50 தெலங்கானா உணவுகள் பரிமாறப்பட்டன. இதில் கிச்சடியை பிரதமர் மோடி ருசித்து சாப்பிட்டார்.
ஹைதராபாத் எச்ஐசிசி-யில் உள்ள நோவோட்டல் நட்சத்திர ஓட்டலில் கடந்த 2 நாட்களாக பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள், மாநில பாஜக தலைவர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் என மொத்தம் 348 விஐபிக்கள் பங்கேற்றனர். இவர்களுக்காக தெலங்கானா மாநிலம், கரீம் நகரைச் சேர்ந்த யாதம்மா என்பவர் மூலம் தெலங்கானா உணவு வகைகள் சமைக்கப்பட்டன. சுமார் 50 வகையாக உணவு வகைகளை யாதம்மா செய்திருந்தார். இவைகளை நேற்று காலை பிரதமர் மோடி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இதில், கோவக்காய் துருவிய தேங்காய் வறுவல், வெண்டைக்காய் முந்திரி வறுவல், தோட்டக்கீரை-தக்காளி வறுவல், பீராக்காய்-மீல் மேக்கர் வறுவல், வெந்தயக்கீரை-பாசிப்பருப்பு கூட்டு, கங்குபாய் குழம்பு, மாங்காய் சாம்பார், பருப்பு கடையல், பச்சி புலுசு, பகாரா ரைஸ், புளியோதரை, புதினா சாதம், கோங்குரா பச்சடி, ஆவக்காய் ஊறுகாய், தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, சுரக்காய் சட்னி, சர்க்கரை பொங்கல், சேமியா பாயசம், அதிரசம், இனிப்பு பணியாரம், பாசிப்பருப்பு வடை, சக்கினாலு, மக்கே கூனாலு, சர்வ பிண்டி உள்ளிட்ட உணவுகள் தயாரிக்கப்பட்டன.
இதில், குஜராத் ஸ்டைல் கிச்சடியை பிரதமர் மிகவும் ருசித்து சாப்பிட்டார் என தெரியவந்துள்ளது. மேலும், சில தெலங்கானா வகை உணவுகளையும் ருசி பார்த்த பிரதமர் அதனை தயார் செய்த யாதம்மாவையும் வெகுவாக பாராட்டியுள்ளார். இதனை என் வாழ்நாளில் மறக்க முடியாது என யாதம்மாள் பெருமிதமாக கூறினார்.