`என்ன பெட்ரோல் கம்மியா இருக்கு? போடு அபராதத்தை’- ட்ராஃபிக் போலீஸின் செயல் சரிதானா?

கேரளாவை சேர்ந்த TJ’s Vehicle Point என்ற யூ-ட்யூப் சேனலில் சமீபத்தில் வெளியான ஒரு வீடியோவில் குறைவான பெட்ரோலுடன் பயணம் செய்ததால் இருசக்கர வாகன ஓட்டுநர் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பது அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது.
கேரளாவை சேர்ந்த தன்கச்சன் என்பவர் TJ’s Vehicle Point என்றொரு யூ-ட்யூப் சேனலை நடத்தி வருகிறார். இன்சூரன்ஸ் பிசினஸில் சர்வேயர் மற்றும் இழப்பு மதிப்பீட்டாளராக 10 வருட அனுபவமும், 15 ஆண்டுகள் மோட்டார் வாகனத் துறையில் மோட்டார் வாகன ஆய்வாளராகப் பணியாற்றிய அனுபவமும் உள்ளவரான இவர், தற்போது வீடியோக்கள் மூலம் இன்சூரன்ஸ் & மோட்டார் வாகனங்கள் துறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
image
அப்படி தனது சமீபத்திய வீடியோவில் சலானொன்றை காண்பித்துள்ள அவர், அதன் பின்னணி குறித்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், “சமீபத்தில் குறைவான பெட்ரோலுடன் பயணப்பட்டதற்காக இருசக்கர வாகன ஓட்டுநர் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்திருக்கிறது. இதுதொடர்பான படங்கள், ஸ்கீரின்ஷாட்கள் எனக்கு கிடைத்துள்ளன. இதுதொடர்பான சலானை கேரள மோட்டார் வாகன துறையினரே கொடுத்துள்ளனர். நான் கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஆய்வாளராக இருந்திருக்கிறேன். ஆனாலும்கூட இப்படியான ஒரு காரணத்துக்காகவெல்லாம் அபராதம் விதிப்பது பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை. கேரள மோட்டர் வாகன சட்டத்தில் இதற்கு சட்டப்பிரிவு எதும் இருக்கிறதா என்றும் எனக்குத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்தவரை, இதுபோன்ற சலான்கள், ஆதாரபூர்வமாக நீதிமன்றத்தில் நிலைத்து நிற்காது” என்றுள்ளார்.
சம்பந்தப்பட்ட அந்த சலான் இதோ…
image
மேலும் பேசியுள்ள அவர், “இதுபோன்ற விதிகள் பொதுப் போக்குவரத்துக்கென்று பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு உண்டு. உதாரணத்துக்கு கார், வேன், பஸ் போன்றவை ஏதேனும் பொது சேவைக்காக பயன்படுத்தப்படுகிறது எனில், போதியளவு பெட்ரோல் அதில் நிரப்பட்டிருக்க வேண்டும். ஒருவேளை அப்படி நிரப்பப்படவில்லை எனில், அந்த வாகனத்தின் உரிமையாளருக்கு ரூ.250 வரை அபராதம் விதிக்கப்படலாம். ஆகவே இந்த விஷயத்தில் பொதுப்போக்குவரத்து வாகன ஓட்டுநர், கமெர்ஷியல் வாகனம் ஓட்டுவோர் கவனத்துடன் இருக்கவேண்டும். இவையன்றி இன்று எனக்கு கிடைத்திருக்கும் சலான் போல, தனிப்பட்ட காரணங்களுக்கு பயன்படுத்தப்படும் தனியார் வாகனங்களுக்கு இந்த விதிகள் எதுவும் பொருந்தாது” என்றுள்ளார்.
image
மேலும் பேசுகையில், “இதுபோன்ற சலான்கள், வாகன போக்குவரத்துத் துறையினர்மீது பொதுமக்களுக்கு நல்ல அபிப்ராயத்தை கொடுக்காது. இந்தியாவை பொறுத்தவரை தவறான காரணத்துக்காக ஒருவருக்கு அபராதம் விதித்து சலான் கொடுப்பது, இதுவொன்றும் முதல்முறை அல்ல. இரு மாதங்களுக்கு முன்பும்கூட, டெல்லியில் இதேபோன்று ஒரு சலான் கொடுத்தார்கள். அதன்படி, ஹெல்மெட் அணியவில்லை என்பதற்காக கார் ஓட்டிய ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. பின் அது தொழில்நுட்ப கோளாறால் ஏற்பட்ட தட்டச்சு பிழை என்று டெல்லி காவல்துறை விளக்கமளித்து மன்னிப்பு கோரியது. 
An e-challan was erroneously issued to an individual driving a car, for not wearing helmet.
It happened inadvertently due to a technical glitch, which has now been rectified. Adoption of state of the art technology has ensured that such errors are minimised.@DelhiPolice— Delhi Traffic Police (@dtptraffic) May 20, 2022
இதன்பின் அந்நபரிடம் சமாதானம் பேசி, ரோஜா பூ கொடுத்து சமரசமான சுவாரஸ்ய சம்பவங்களும் கூட நடந்தன.
image
டெல்லி சம்பவம், மிகவும் வைரலானது. சொல்லப்போனால் பலருக்கும் போக்குவரத்துத்துறையினர் மீது மோசமான பிம்பத்தை ஏற்படுத்தியது. இப்படியான விஷயங்களையெல்லாம் அதிகாரிகள் கவனத்துடன் கையாள வேண்டும்” என்றுள்ளார்.
தகவல் உதவி: TJ’s Vehicle PointSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.