“சார் இதையும் கொஞ்சம் பாருங்க.. ப்ளீஸ்" தமிழகத்தின் சிறந்த நகராட்சி `ஶ்ரீவில்லிபுத்தூர்’ மறுபக்கம்!

இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி அரசுத் துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு ஆண்டுதோறும் சிறப்பு பரிசும், பணமும் வழங்கப்பட்டு கௌரவிக்கபடுகிறது. அந்தவகையில் தமிழகத்தில் சிறந்த நகராட்சியாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் சிறந்த நகராட்சியாக தேர்வு செய்யப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புப்பரிசும், 15 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் வழங்கி கௌரவிக்கிறார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் | கழிவுகள்

இந்த செய்தி அறிந்ததிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் அதிகாரிகளும், பணியாளர்களும் பம்பரமாய் சுற்றி சுழன்று வருகின்றனர். இந்நிலையில் மக்களின் மனநிலையை அறிய ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்று விசாரித்தோம். அப்போது பேசியவர்கள் நம்மை அதிர்ச்சி அடைய செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் | தெபபக்குளம்

“நகராட்சியின் 4 திசைகளிலும் எண்ணற்ற சீர்கேடுகள் இருக்கு, குப்பையை கொட்டி சுகாதாரகேடு வரப்போவுது, வாராங்கால் தூர்வாரவில்லை. குடிநீர் தொட்டி சும்மாக்கிடக்கு” என சிறந்த நகராட்சியில் மக்கள் சுட்டிக்காடாடிய இடங்கள் யாவும் பல்லிழித்து சிரித்தன.

ஸ்ரீவில்லிபுத்தூர் | மின்மோட்டர் இல்லாத அறை

நகராட்சிக்குட்பட்ட மங்காபுரம், அய்யம்பட்டி, காளியம்மன் நகர், வ.உ.சி‌.நகர், திருவண்ணாமலை ரோடு, ஆத்துக்கடை தெரு, ராஜாஜி சாலை, வ.உ.சி.நகர், சக்கரை குளம், மல்லபுரம் தெரு, பாஞ்சால வேலி தெரு குடியிருப்பு வாசிகளிடம் பேசினோம்,

“இந்த தெருவுக்கு குடிவந்து 20 வருஷம் ஆகிட்டு. ரொம்ப வருஷம் போராடி தான் எங்களுக்கு ரோடு போட்டாங்க. அதோட, மோட்டார் வச்சி தண்ணிநிறைக்கிற மாதிரி குடிநீர் தொட்டியும் கட்டி கொடுத்தாங்க. வச்சிக்கொடுத்த புதுசுல தண்ணித்தொட்டி நல்லாத்தான் இருந்துச்சு.

ஸ்ரீவில்லிபுத்தூர் | குடிநீர்த்தொட்டி

அப்பறம் என்னான்னு தெரியல மோட்டர் ஓடல. இது சம்பந்தமா கவுன்சிலர்ட்ட சொன்னோம். அப்புறம் நகராட்சிகாரவுக வந்து பார்த்தாங்க. அவங்க என்ன நினைச்சாங்களோ தெரியல மோட்டாரை கழட்டிக் கொண்டு போய்டாங்க. இப்போ இந்த குடிநீர் தொட்டி மட்டும் எனக்கென்னனு இருக்குது.

ஸ்ரீவில்லிபுத்தூர் | நகராட்சி

இந்த ஏரியாவுல 3 இடத்துல குடிநீர் தொட்டி இருக்கு. அதுல ரெண்டு இடத்துல மோட்டாரை கழட்டி நகராட்சி அதிகாரிங்க கொண்டு போயிட்டாங்க. இப்ப நாங்க தண்ணி எடுக்கனும்னா பக்கத்து தெருவுக்கு போயிட்டு வரனும். நல்லத் தண்ணி 10 நாளைக்கு ஒருமுறைத்தான் எங்க பகுதிக்கே வருது.

அதே மாதிரி நகராட்சி அலுவலகத்திற்கு பக்கத்திலேயே ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான சர்க்கரை குளம் இருக்கு. அந்த குளம் முழுக்க பாசிப்பிடிச்சி துர்நாற்றம் வீசுது. அதப்பத்திலாம் அதிகாரிங்க கவலையேப்பட மாட்டேங்குறாங்க. குளத்தோட நாலு முக்குலேயும் குப்பையை அள்ளிக்கொட்டிருக்காங்க.

கழிவுநீர் | ஸ்ரீவில்லிபுத்தூர்

நகராட்சியில மொத்தம் 33 வார்டு இருக்கு. அது ஒவ்வொன்றிலும் நிறைய குறைகள் இருக்கு. நகராட்சிக்குட்பட்ட பல இடங்களில் கண்ட, கண்ட இடங்களில் குப்பைகள் கிடக்கு. அதன் முறையா சுத்தம் செய்யல. பல தெருக்களில் கழிவு நீர் கால்வாய் தூர்வாரப்படவே இல்லை.

குப்பைகள் | ஸ்ரீவில்லிபுத்தூர்

கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு சாக்கடை தண்ணி ரோட்டுக்கு வரக்கூடிய நிலைமை ஏற்பட்டிருக்கு. இவ்வளவு ஏன், துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு முன்னாலேயே குப்பைகளை மூடை மூடையா குவிச்சு வச்சிருக்காங்க.

அதை சுத்தம் பண்றதுக்கு நகராட்சிக்கு நேரம் இல்லை. அந்த அளவுக்கு இந்த ஊரு மோசமா இருக்கு. இவ்வளவு குறைகள் இருக்கிற ஊரை ஆய்வுசெய்து சிறந்த நகராட்சின்னு அறிவிச்சிருக்காங்கன்னு சொன்னா எங்களால நம்பவே முடியல. ஆண்டாள் கோயில் தேரோட்டத்தையொட்டி ரத வீதிகளை சுத்தம் செஞ்சாங்க. அதோட சேர்ந்து சில தெருக்களை சுத்தம் செஞ்சாங்க. அந்த சமயத்துல அதிகாரிகளை கூட்டிட்டு வந்து இதுதான் ஸ்ரீவில்லிபுத்தூர்னு சொல்லி பரிசு வாங்கிட்டாங்களோ என்னவோ” என்றனர் ஆதங்கம் தீர.

அடைப்பு | ஸ்ரீவில்லிபுத்தூர்

வியாபாரியிடம் பேசினோம், “இந்த ஏரியா மங்காபுரம், அய்யம்பட்டி பகுதி. இது இந்த ஊர் சேர்மனோட வார்டு பகுதி. இந்த ஏரியாவுலேயே நிறைய தெருக்கள்ல கழிவுநீர் கால்வாய் தூர்வாராம தண்ணி தேங்கி நிக்குது. இங்க நிறைய பகுதிகளில் நகராட்சியும் யூனியன் பகுதியும் சேர்ந்தே இருக்குது. அந்த மாதிரியான இடங்களில் கொட்டப்படுற குப்பையை நகராட்சிக்காரங்க அள்ளிட்டு போறதா? இல்ல யூனியன் பகுதியில் வேலை செய்யுற துப்புரவு பணியாளர்கள் அள்ளிட்டு போறதானு சண்டை நடக்குது. இந்த குழப்பத்துலேயே பல இடங்களில் குப்பைகள் எடுத்துட்டு போகல. மெயின்ரோட்டுல காமராஜர் சிலை திருப்பத்துல அடிக்கடி குடிநீர் குழாய் உடைஞ்சி போயிடுது. அதை சரிசெய்திட்டு தோண்டிப் போட்ட ரோட்டை ஒழுங்காக்கூட போட்டுத்தர மாட்டேங்குறாங்க” என்றார்.

நகராட்சித் தலைவர் தங்கம் ரவிக்கண்ணனிடம் பேசினோம், “சேலத்தை சேர்ந்த சுல்தானா அதிகாரி தலைமையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் ஆகஸ்ட் 10-ந்தேதி ஆய்வு நடத்தப்பட்டது. சுகாதாரம், கழிவு மேலாண்மை, வரிவசூல், நிதி நிலைமை, பணிகள் உள்ளிட்டவைகள் அடிப்படையில் அந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் எல்லா நிலையிலும் சிறந்த மதிப்பெண்கள் பெற்று ஸ்ரீவில்லிபுத்தூர் சிறந்த நகராட்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

குப்பை | ஸ்ரீவில்லிபுத்தூர்

மக்களின் பிரச்னைகளை சரி செய்வதில் கவுன்சிலர் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகின்றனர். சில இடங்களில் கழிவுநீர் கால்வாய் தூர்வாருதல் மறுகட்டமைப்பு செய்தல் பணிகள் செய்யப்படவேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். யூனியன் பகுதியும், நகராட்சி பகுதியும் சேருமிருடத்தில் கொட்டப்படும் கழிவுகளை சேகரிப்பதில் உள்ள பிரச்னையை சரிசெய்ய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

ஆணையாளர் ராஜமாணிக்கத்திடம் பேசினோம். “நகராட்சியில் தற்போது இருக்கும் பிரச்சினைகள் குறித்து கவனத்துக்கு வந்துள்ளது. கூடுதலாக ஆட்களை பணியமர்த்தி அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்று முடித்துக் கொண்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.