கிருஷ்ணகிரியில் நடந்த மாநில ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. நெல்லை அணி 2-ம் இடம் பிடித்தது.
தடகள சாம்பியன்ஷிப் போட்டி
கிருஷ்ணகிரி மாவட்ட தடகள சங்கம், தமிழ்நாடு தடகள சங்கத்துடன் இணைந்து நடத்திய 35-வது தமிழ்நாடு மாநில ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் கிருஷ்ணகிரியில் கடந்த 17-ந் தேதி தொடங்கியது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 4,200 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இவர்களில் 14, 16, 18, 20 வயதிற்குட்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன. நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்ட போட்டி, குண்டு எறிதல் உள்பட பல்வேறு தடகள போட்டிகள் நடைபெற்றன. நேற்று இறுதி போட்டிகள் நடந்தன. தொடர்ந்து நிறைவு விழா நடந்தது.
பரிசுகள்
இந்த விழாவுக்கு தமிழ்நாடு தடகள சங்க துணை தலைவர் ஜி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி மாவட்ட தடகள சங்க துணை தலைவர் எம்.கவுசிக் தேவ் மதியழகன் வரவேற்று பேசினார். தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் லதா, கிருஷ்ணகிரி மாவட்ட தடகள சங்க தலைவா் டி.மதியழகன் எம்.எல்.ஏ., கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் கிருஷ்ணகிரி மாவட்ட தடகள சங்க பொருளாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.
தொடர்ந்து பரிசு வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தன. ஒவ்வொரு வயதிற்கு உட்பட்ட சிறந்த வீரர், வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. சிறந்த விளையாட்டு வீரர்களாக அபினவ், அசோக்குமார், பாலஜீவா, ரத்தீஷ் ஆகியோரும், வீராங்கனைகளாக கோபிகா, அபிநயா, ருத்திகா, கொலேசியா ஆகியோரும் பரிசுகளை பெற்றனர்.
ஒட்டு மொத்த சாம்பியன்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அணி 264 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த பெண்கள் சாம்பியன் பட்டத்தை பெற்றது. 176 புள்ளிகள் பெற்று 2-ம் இடத்தை திருநெல்வேலி எஸ்.ஏ.வி. பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியும் பெற்றன. ஆண்கள் பிரிவில் 217 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணியும், 170 புள்ளிகள் 2-ம் இடத்தை திருநெல்வேலி எஸ்.ஏ.வி. பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமியும் பெற்றன.
ஒட்டு மொத்த ஆண்கள் மற்றும் பெண்கள் சாம்பியன் பட்டத்தை 481 புள்ளிகள் பெற்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணியும், 2-வது இடத்தை 346 புள்ளிகள் பெறறு திருநெல்வேலி எஸ்.ஏ.வி. பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியும் பெற்றன.