சீன கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய மாநாட்டு பணிகள் தொடக்கம்

பீஜிங்,

சீனாவில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவராகவும், அதிபராகவும் ஜின்பிங் கடந்த 2012-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். ஒருவர் 10 ஆண்டுகள் மட்டுமே தலைவராக (அதிபர்) இருக்கும் வகையில் கட்சி விதிகள் உள்ளன.

அந்தவகையில் ஜின்பிங்கின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் நிறைவடைய உள்ளது. எனவே புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேசிய மாநாடு அடுத்த மாதம் (அக்டோபர்) 16-ந்தேதி நடைபெறுகிறது.

ஆனால் முன்னெப்போதும் இல்லாத வகையில் 3-வது முறையாக அதிபராகும் நோக்கில் ஜின்பிங் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதில் அவர் வெற்றியும் பெற்றுவிட்டதாக தகவல் வெளியாகின.

அதாவது அடுத்த மாதம் நடைபெறும் தேசிய மாநாட்டில், ஜின்பிங்கின் பதவிக்காலம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் தன்னை எதிர்க்கும் அரசியல் குழுவின் ஒரு பிரிவினரை ஜின்பிங் அரசு கடுமையாக களையெடுத்து வருகிறது. அந்தவகையில் 2 முன்னாள் மந்திரிகள் உள்ளிட்ட 3 பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஊழல் வழக்கில் சமீபத்தில் கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. இது அவரது எதிர்ப்பாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, சீன அதிபர் ஜின்பிங் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் உலகமெங்கும் சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

சீன கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்கள், அதிபர் பதவியில் இருந்து ஜின்பிங்கை நீக்கியதை தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு உள்ளதாக வதந்தி பரவியதாக, சீனாவை சேர்ந்த ஜெனிபர் ஜெங்க் என்ற பெண் மனித உரிமை ஆர்வலர் வீடியோ பதிவு வெளியிட்டு இருந்தார்.

மேலும் சீனாவின் புதிய அதிபராக ராணுவ தளபதி லி கியாமிங் பதவி ஏற்றுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின.

ஆனால் இந்த விவகாரத்தில் சீன கம்யூனிஸ்டு கட்சியோ, அரசோ எந்தவொரு அதிகாரபூர்வ தகவலையும் வெளியிடவில்லை.

இந்த நிலையில் அக்டோபர் 16-ந்தேதி நடைபெறும் தேசிய மாநாட்டுக்கான பணிகளை சீன கம்யூனிஸ்டு கட்சி தொடங்கி உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மொத்தம் 2,296 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இந்த பிரதிநிதிகள் அனைவரும் ஒரு புதிய சகாப்தத்துக்கான சீனப் பண்புகளுடன் கூடிய சோசலிசம் பற்றிய ஜின்பிங்கின் வழிகாட்டுதல் மற்றும் கட்சியின் அரசியலமைப்பின்படி தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

சீன கம்யூனிஸ்டு கட்சிக்குள்ளே ஜின்பிங்குக்கு எதிர்ப்பு நிலவி வரும் நிலையில், அடுத்த மாதம் நடைபெறும் இந்த மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.